தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் மேற்கொள்ளும் வழக்கமான மருத்துவம பரிசோதனைக்காகவே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது.
தமிழகமே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. புதன்கிழமை நள்ளிரவு அதிமுக கட்சி பெயர், இரட்டை இலை சின்னம், கொடி அனைத்தையும் முடக்கி தேர்தல் ஆணையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சூழலில் தேமுதிக தலைமை நிலையம் வியாழக்கிழமை அதிகாலை ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. அதில், விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் மேற்கொள்ளும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மருத்துவ பரிசோதனை முடிவடைந்ததும் ஓரிருநாளில் விஜயகாந்த் வீட்டுக்கு திரும்புவார். ஆகையால் நிர்வாகிகளும் தொண்டர்களும் நேரில் வர வேண்டாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.