ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் புனேயில் நடந்த முதல் டெஸ்டில் 333 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் 75 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்று இருந்தன. ராஞ்சியில் நடந்த 3-வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில், தரம்சாலாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் முகம்மது சமிக்கு ஆடும் லெவன் அணியில் வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது முகம்மது சமி காயமடைந்தார். இதனால் அடுத்து வந்த போட்டிகளில் அவர் பங்குபெறவில்லை. சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அவர் தனது உடற்தகுதியை நிரூபித்தார்.
தரம்சாலா மைதானத்திற்கு இன்று காலை வந்து சேர்ந்த முகம்மது சமி பயிற்சியில் பங்கு பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், ஆடும் லெவன் அணியில் முகம்மது சமி பங்குபெறுவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதுகுறித்து கேப்டன் விராட் கோலி கூறுகையில் “முகம்மது சமி பயிற்சியில் ஈடுபட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதுகுறித்து அணித்தேர்வாளர்களிடம் நான் எதையும் பேசவில்லை. எனினும், சாத்தியங்கள் இருந்தால் அணித்தேர்வாளர்கள் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட அவரை அணுகுவார்கள்” என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 15 விக்கெட்டுகளை முகம்மது சமி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.