சேவலுக்குப் போட்டி? மறுபடியும் முதல்ல இருந்தா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியுள்ளது.

சசிகலா அணியினரோ ஓபிஎஸ் அணியினரோ இரட்டை இலை சின்னத்தையோ அதிமுகவின் பெயரையோ பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ள தேர்தல் ஆணையம், இரு அணியினரும் விருப்பமான புதிய சின்னங்களுடன் தேர்தல் ஆணையத்தை அணுகுமாறும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இரு அணியினரும் சேவல் சின்னத்தைக் கைப்பற்ற முயற்சி செய்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு ஜானகி மற்றும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக பிரிந்து நின்றபோது, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதையடுத்து 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜானகி புறா சின்னத்திலும் ஜெயலலிதா சேவல் சின்னத்திலும் போட்டியிட்டனர்.

சேவல் சின்னத்தில் நின்ற ஜெயலலிதா 25 இடங்களைக் கைப்பற்றி கட்சியையும் சின்னத்தையும் கைப்பற்றினார்.

அதனால், இரட்டை இலை சின்னத்தையும் கட்சியையும் ஜெயலலிதா கைப்பற்ற ராசியாக இருந்த சேவல் சின்னத்தைப் பெற இருதரப்பும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இரட்டை இலையைத் தொடர்ந்து சேவலா? மறுபடியும் முதல்ல இருந்தா?