ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் என அதிமுக பிளவு பட்டுள்ளதால் கட்சியும், சின்னமும் இந்திய தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் அவர் தோற்றுவித்த கட்சியும், சின்னமும் முடங்கிப் போனது அதிமுக தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் இருந்து பிரிந்த எம்ஜிஆர் 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி அதிமுக என்ற கட்சியை புதிதாக தொடங்கினார். 1973-ம் ஆண்டு திண்டுக்கல் லோக்சபாவிற்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்காக அதிமுக வேட்பாளராக களமிறங்கிய மாயாத்தேவருக்காக சுயேட்சையாக ஒதுக்கப்பட்ட சின்னம்தான் இரட்டை இலை. இதுவே வெற்றிச்சின்னமாக மாறி அஇஅதிமுகவின் நிரந்தர சின்னமானது.
எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு அவரது மனைவி ஜானகி, அப்போதய கொள்கைப் பரப்பு செயலாளர் ஜெயலலிதா இடையே 1987ஆம் ஆண்டு பிளவு ஏற்பட்டது. ஜானகி அணி, ஜெ அணி என்று அதிமுக பிளவு படவே கட்சியின் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டது.
இரட்டை புறா – சேவல்
1989ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலை பிளவுபட்ட அதிமுக சந்தித்தது. அதில் ஜானகி அணிக்கு இரட்டைப் புறா சின்னமும், ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னமும் கிடைத்தது. இரட்டை இலை இல்லாமல் இரு அணிகளுமே ஆட்சியை பிடிக்க முடியவில்லை. திமுக ஆட்சியைக் கைப்பற்றியது.
நிரூபித்த ஜெயலலிதா
ஜெயலலிதா தலைமையிலான அணி 27 இடங்களில் வெற்றி பெற்று 2வது இடத்தைப் பெற்றது. ஜானகி அணிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை. ஆண்டிப்பட்டியில் ஜானகி தோல்வியுற்றார். அதேசமயம், ஜெயலலிதா போடிநாயக்கனூர் தொகுதியில் அபார வெற்றி பெற்றார். இத்தேர்தலில் தனது பலத்தையும், தான்தான் அதிமுக என்பதையும் ஜெயலலிதா நிரூபித்தார்.
இரட்டை இலை
இந்தத் தேர்தலுக்குப் பின்னர் ஜானகி அரசியலை விட்டு விலகினார். எம்.ஜி.ஆரின் வாரிசாக அவர் ஜெயலலிதாவை அறிவித்து, ஏற்றுக் கொண்டார். இதனால் அதிமுக ஜெயலலிதா வசம் வந்தது. முடக்கப்பட்ட இரட்டை இலையும் மீண்டும் துளிர்த்தது. அதே ஆண்டு மதுரையிலும் மருங்காபுரியிலும் நடைபெற்ற இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தற்போது மீண்டும் இரட்டை இலை சின்னத்திற்கு சோதனை வந்துள்ளது. சசிகலா, ஓபிஎஸ் அணிகள் மோதலால் அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது.
கட்சியும், சின்னமும்
தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 85 சின்னங்களில் ஏதாவது மூன்று சின்னங்களை இரு அணிகளும் தங்களுக்கு தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதிமுக என்ற பெயர் இல்லாத வேறு ஒரு பெயரை, இரு அணிகளும் தேர்ந்தெடுத்து தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி முடிவால் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகிய அணிகள், வேறுவேறு சின்னங்களை பெறுவது மட்டுமின்றி கட்சியின் பெயரையும் தேர்வு செய்ய வேண்டும்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா
அதிமுக என்ற கட்சியை எம்ஜிஆர் நிறுவி 45 ஆண்டுகள் ஆகிவிட்டது. இரட்டை இலை சின்னம் கிடைத்தும் 45 ஆண்டுகள் ஆகிவிட்டது. கட்சியின் நிறுவனர் எம்ஜிஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த சூழ்நிலையில் கட்சியின் பெயரும், சின்னமும் முடக்கப்பட்டுள்ளது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜெயலலிதா சபதம் கனவாகுமோ?
தனக்குப் பிறகும் அதிமுக 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்று கடந்த ஆண்டு சட்டசபையில் பகிரங்கமாக அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால் அவரது மறைவிற்கு பிறகு 100 நாட்களில் அதிமுக என்ற கட்சியும், இரட்டை இலை என்ற சின்னமும் முடங்கிப் போனதுதான் சோகம். இது அதிமுகவை உயிராக நினைத்து இரட்டை இலையை இதயத்தில் பச்சை குத்தியுள்ள ஒவ்வொரு தொண்டனுக்கும் வேதனையான விசயம்தான்.