முடங்கிய இரட்டை இலை: நினைத்ததை நடத்தியே முடிப்பவர்கள் நாங்கள்…நாங்கள்…கொண்டாட்டத்தில் தமிழக பாஜக!!

நாரதர் கலகம் நன்மையில் முடியட்டும் என்பார்கள்… தற்போது தமிழக பாஜக நடத்திய கலகம் அந்த கட்சிக்கு நன்மையாகவும் அதிமுக எனும் பேரியக்கத்துக்கு பெரும் சோதனையாகவும் அமைந்துவிட்டது.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவையும் ஆளும் அரசையும் ஆட்டுவிக்கும் சக்தியாக பாஜக விஸ்வரூபமெடுத்தது. தமிழகத்தில் தலைகீழாக நின்றாலும் ஒரு இடம் கூட பெற முடியாது என்பது பாஜகவுக்கு நன்கே தெரியும்.

ஏதேனும் ஒரு திராவிட கட்சியின் தோளில் சவாரி செய்தால்தான் தமிழகத்தில் குப்பை கொட்டவும் முடியும் என்பது அக்கட்சி அறிந்ததுதான். அந்த கட்சிக்கு வாய்ப்பாக அதிமுக எனும் பேரியக்கத்தின் தலைவராக திகழ்ந்த ஜெயலலிதா காலமானார்.

மன்னார்குடி கோஷ்டி
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவை வழிநடத்தச் செல்ல வலிமையான இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லை. மன்னார்குடி கோஷ்டிதான் அதிமுகவின் அடுத்த தலைமை என்ற நிலையில் பாஜக கடந்த சில மாதங்களாக அத்தனை சித்து வேலைகளையும் காட்டி வந்தது.

டெல்லிக்கு நெருக்கடி
இதன் உச்சமாக அதிமுகவின் இரட்டை இலைக்கும் சோதனை ஏற்பட்டது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த தமிழக பாஜக தலைவர்கள் டெல்லி மேலிடத்துக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தனர்.

அறிக்கைகள்

இதன்விளைவாகத்தான் இரட்டை இலை முடங்கும் என தமிழக பாஜக தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். இதற்கு சசிகலா அதிமுகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

டெல்லி மேலிடப் பேச்சுவார்த்தை
தற்போது தமிழக பாஜக தலைவர்கள் எதிர்பார்த்தது போலவே இரட்டை இலை சின்னம் முடங்கிவிட்டது. தலைமை தேர்தல் ஆணையருடன் டெல்லி மேலிடத் தலைவர் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக சில நாட்களுக்கு முன்னர் பேசியபோதே தமிழக பாஜக தலைவர்களுக்கு ரிசல்ட் தெரிந்தே அறிக்கைவிட்டு வந்தனராம்.

உற்சாகத்தில் கமலாலயம்
இப்போது நினைத்தபடியே நடத்தி காட்டிவிட்டோம் என்ற உற்சாகத்தில் மிதக்கிறதாம் கமலாலயம். அதாவது அசைக்க முடியாத திராவிட கட்சிகளில் ஒன்றை தங்களுக்கே உரிய குறுக்கு வழியில் போயாவது முடக்கிவிட்டோம் என்கிற பரம திருப்திதானாம் தமிழக பாஜக தலைவர்களுக்கு!