சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக அவசர கோலத்தில் அவர்கள் இஷ்டப்படி தேர்ந்தெடுத்துக்கொண்டதுதான் இரட்டை இலை முடக்கத்திற்கு காரணமாக போய்விட்டது.
அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி மறைந்ததை தொடர்ந்து, ஒரு வார காலத்திலேயே அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா எடுத்த முயற்சிகள் மக்களை முகம் சுளிக்க வைத்தன.
ஒவ்வொரு நிர்வாகிகளாக போயஸ் இல்லம் அழைத்துச் சென்று, “எங்கள் யாருக்குமே தகுதியில்லை, கட்சியை காக்க வந்த காவல் தெய்வம் நீங்கள்தான்..” என்ற ரேஞ்சில் பேச வைத்து பேட்டியை ஒளிபரப்ப வைத்து அடித்த கூத்துகளுக்கு அளவே இல்லை.
பொதுச்செயலாளர்
இதில் பன்னீர்செல்வமும் கட்டாயப்படுத்தப்பட்டவரை போல சின்னம்மா வர வேண்டும் என ஒப்பித்துக்கொண்டிருந்தார். தம்பிதுரை போன்றோர் இதையே நாபி கமலத்திலிருந்து உச்சஸ்தாபியில் உரக்க கூறினர். அப்புறம் ஒரு சுபயோக சுப தினத்தில், பொதுக்குழு உறுப்பினர்களை மட்டும் கூட்டிவைத்து, சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
விதிமீறல்கள்
கட்சியில் இணைந்து 5 வருடங்கள் ஆகாத நிலையில் பொதுச்செயலாளராக ஒருவரை தேர்ந்தெடுக்க முடியாது, அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்துதான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்ற அதிமுகவின் விதிகளை அவர்களே காற்றில் பறக்கவிட்டு சசிகலாவை தேர்ந்தெடுத்தனர். ஏன் இவ்வளவு அப்பட்டமான விதிமீறல்? அத்தனையும் பதவி ஆசையன்றி வேறென்னவாக இருக்க முடியும்?
பேராசை
இந்த விதிமீறல்களுக்கு சப்பைகட்டு கட்ட, சசிகலா தேர்ந்தெடுக்கப்படவில்லை, நியமிக்கப்பட்டார்.. அதுவும் தற்காலிகமாக என்றெல்லாம் வாதம் முன் வைக்கப்பட்டது. ஆனால் பேராசை பெரு நஷ்டம் என்பதை போலத்தான், இப்போது அதிமுக நிலை ஆகிவிட்டது. சசிகலா நியமனத்தை கேள்வி எழுப்பிதான் தேர்தல் ஆணையத்திற்கு படையெடுத்தது ஓ.பி.எஸ் தரப்பு.
காரணம் இதுதான்
பொதுச்செயலாளர் தேர்வு நியாயமாக நடைபெறவில்லை என்பதற்கான ஆதாரங்களை அடுக்கியது ஓ.பி.எஸ் தரப்பு. இதனால்தான், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. தனி ஒருவரின் பதவி ஆசை எத்தனையோ கனவுகளுடன் எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சியை அதளபாதாலத்தில் தள்ளிவிட்டது. அந்த தனி ஒருவரின் முதல்வர் நாற்காலி ஆசைதான், இன்று அதிமுக இரண்டாக உடையவும் ஒரு காரணமாயிற்று.