ஜெயலலிதாவின் இடத்தை நிரப்பவே ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில், சசிகலா அணி சார்பில் ‘அ.தி.மு.க. அம்மா’ என்ற கட்சியில் தொப்பி சின்னத்தில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார்.
ஓ.பி.எஸ். அணி சார்பில் ‘அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா’ என்ற கட்சியில் மின்கம்பம் சின்னத்தில் மதுசூதனன் போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் மருதுகணேஷும், பா.ஜ.க சார்பில் கங்கை அமரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயமும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில், தீபாவும் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து ஆர்.கே.நகர் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. திமுக தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் டி.டி.வி. தினகரன் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருக்கு ஆதரவாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆர்.கே. நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது ”இரட்டை இலை சின்னத்தை முடக்க யார் காரணம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஜெயலலிதாவின் இடத்தை நிரப்பவே ஆர்.கே. நகரில் டி.டிவி. தினகரன் போட்டியிடுகிறார்” என்றார்.