தென்கொரியாவில் 304 பேரை பலிகொண்ட கப்பல் தூக்கி நிறுத்தம்

தென்கொரியாவில் மாணவ, மாணவிகள் உல்லாசப்பயணம் மேற்கொண்ட கப்பல், ஜிண்டோ தீவில் உள்ள கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

2014-ம் ஆண்டு, ஏப்ரல் 16-ந் தேதி நடந்த இந்த துயர சம்பவத்தில், சுமார் 300 குழந்தைகள் உள்பட 304 பேர் உயிரிழந்தது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த சோகத்தில் இருந்து குழந்தைகளின் பெற்றோர் இன்னும் மீள முடியாமல் தவிக்கின்றனர். 6 ஆயிரத்து 825 டன் எடை உடைய அந்த கப்பல், கடலுக்கு அடியில் போய் விட்டது.

ஆனால் இந்த கப்பலை தூக்கி நிறுத்தி மீட்க வேண்டும் என்ற கோரிக்கை அங்கு வலுத்தது. இதையடுத்து அதற்கான நடவடிக்கையை அந்த நாட்டு அரசு மேற்கொண்டது.

அதன் விளைவாக கடுமையான முயற்சிக்குப்பின்னர் அந்த கப்பல் இப்போது கடலுக்கு அடியில் இருந்து தூக்கி நிறுத்தப்பட்டு விட்டது. நூற்றுக்கணக்கான சீன தொழிலாளர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த கப்பல் இன்னும் 2 வாரங்களில் துறைமுகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பலியான குழந்தைகளின் குடும்பத்தினர் அந்த கப்பலை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.