ஆர்.கே. நகரில் சரத்குமாரின் சமக வேட்பாளர் மனு நிராகரிப்பு!

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மாற்று வேட்பாளரின் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதால் சரத்குமார் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஜெயலலிதா மறைவினால் ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதியில் ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்களை கடந்த 16அம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 127 வேட்பாளர்கள் தாக்கல் செய்தனர்.

அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசலால் கொடி, சின்னம் ஆகியவற்றைத் தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டது. சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரன், ‘தொப்பி’ சின்னத்திலும் பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன், ‘மின்கம்பம்’ சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

சமத்துவ மக்கள் கட்சி தொடங்கிய சரத்குமார் கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். தொன்காசி தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவானார்.

கடந்த 2016 ஆம் சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக கூறினார். மீண்டும் ஜெயலலிதாவை சந்தித்தார். திருச்செந்தூரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிளவு பட்டது. உடனடியாக ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் சரத்குமார். அதே வேகத்தில் ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது சமக சார்பில் வேட்பாளரை அறிவித்தார் சரத்குமார்.

வடசென்னையில் மக்கள் மத்தியில் நன்றாக அறிமுகமான மாநில துணைப் பொதுச்செயலாளர் அந்தோணி சேவியரை நிறுத்தலாம் என்று கட்சியினர் தெரிவித்தனர். அதன்படி, அந்தோணி சேவியர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடைசி நாளான நேற்று அந்தோணி சேவியர் வேட்பு மனுவை தாக்கல்செய்தார்.

தனித்து போட்டியிட்டு தங்களின் வலிமையை நிரூபிப்போம் என்று வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் பேசினார் சரத்குமார். வேட்பாளர் அந்தோணியும் நம்பிக்கையுடன் பேட்டியளித்தார். மாற்று வேட்பாளராக வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ராயபுரம் கே.விஜயன் மனு தாக்கல் செய்தார்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்ற நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் அந்தோணி ராஜ், மாற்று வேட்பாளர் கே.விஜயன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இது சரத்குமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.