பிரச்சினைகளை தீர்க்கும் நாவலடியார் கருப்பண்ணசாமி கோவில்

கடந்த காலங்களில் நீதிபதிகளை, சீமைத்துரை, ஜட்ஜ் சாமி என்று கிராம மக்கள் மரியாதையுடன் அழைப்பது வழக்கம். அவ்வாறு மரியாதைமிக்க நீதிபதிகளிடம் தங்கள் நிலப்பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு மனு கொடுத்து வழக்குகள் மூலம் தீர்வு காண்பது தொன்று தொட்டு நடைபெறும் நிகழ்வுகளாகும். ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கடவுளையே ‘ஜட்ஜ்’ சாமி என்று பக்தர்கள் மனு கொடுத்து வழிபாடு செய்கிறார்கள் என்றால் வியப்பாக இருக்கிறதா?.

ஆம்! சீமைத்துரை ஜட்ஜ் நாவலடி கருப்பண்ணசாமி என்றழைக்கப்படும் அந்த சாமி வீற்றிருக்கும் கோவில், நாமக்கல் மாவட்டம், மோகனூருக்கு அருகே ஒரு கிலோமீட்டர் தொலைவில் குமரிபாளையம் கிராமத்தில் இருக்கிறது. இந்தக் கோவிலின் முன்பகுதியில் அழகிய பிரமாண்டமான இரண்டு குதிரை வாகனங்கள் உள்ளன. உள்புறத்தில் மேற்கு முகமாக பட்டமரத்தான் என்றழைக்கப்படும் நாவலடி கருப்பண்ணசாமி மூலஸ்தானம் பட்ட நாவல் மரத்தின் அடியில் ஒரு வடிவம் இல்லாத உருவாக சிறிய குழியில் உள்ளது.

முற்காலத்தில் சிறிய பனை ஓலையால் வேய்ந்த குடிசையில் இருந்தது. தற்போது கட்டிடம் கட்டப்பட்டு புனரமைக்கப்பட்டு பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இந்த சாமியின் அருகில் பட்டுப்போன வேம்பு மரம் இன்றும் காட்சி தருகிறது. நாவல் மரத்தடியில் அவதரித்த தெய்வம் என்பதால் நாவலடியான் என்ற பெயரில் இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். இதன் மேற்புறம் கிழக்கு முகமாக நாவலடியான் உற்சவர் மரத்தால் செய்யப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டிற்கும் மத்தியில் வடக்கு பார்த்த செல்லாண்டியம்மன் உருவச்சிலை உள்ளது. நாவலடியான் கோவிலில் கற்களால் உருவாக்கப்பட்ட நாய்கள் சிலைகளும் உள்ளன. சீமைத்துரை ஜட்ஜ் நாவலடியான், தமது வெண்குதிரை மீது ஏறி தம்மிடம் வந்து தமது குறைகளை கூறியும், கடிதங்கள் மூலம் புகார் கொடுத்துள்ள பக்தர்களின் குறையை தீர்க்கவும் அவர் வெளியே செல்லும் போது அவருடன் இந்த நாய்கள் உடன் செல்லும் என்றும் கூறுகிறார்கள். இந்த சீமைத்துரை ஜட்ஜின் கோவிலில் தலைவாசல் கோபுரம் அமைக்கும் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

தல வரலாறு :

குறுநில மன்னர்கள் காலத்தில் மோகூர் என்றழைக்கப்பட்ட மோகனூர் குமரிபாளையத்தில், நாவலடியான் சுயம்புவாக தோன்றி உள்ளார். அந்த காலத்தில் விறலியர், கூத்தர், பாணர் என்று பலர் ஊரின் ஒதுக்கு புறமாக தங்கி தங்கள் திறமைகளை காட்டி மக்களிடம் பொருள் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். இவ்வாறு வந்த நாடோடிகள் இந்த பகுதியில் பசுவுடன் கட்டை வண்டியில் அங்கு வந்தனர். ஒரு நாள் காலையில் அவர்கள் அழைத்து வந்த பசுவை காணவில்லை. எனவே அந்த பசுவைத் தேடத் தொடங்கினர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள மணல் மேட்டை அடுத்துள்ள பள்ளமான இடத்தில், பசு நிற்பதைக் கண்டனர். அருகில் சென்று பார்த்த போது, பசுவின் மடியில் இருந்து தானாகவே பால் சொரிந்து கொண்டிருந்தது. பால் சுரக்கப்பட்ட பகுதியில் அரை அடி உயரம் கொண்ட வெண்ணிற பளிங்குக்கல் போல் ஒளி உமிழும் சுய உருவம் தோன்றியது. அந்த உருவத்திற்கு கீழ்புறம் நாவல் மரம் பெரியதாக காட்சியளித்தது. எனவே சுயம்புவாக தோன்றிய இறைவனை நாவலடியான் என்று அழைத்து வழிபட மக்கள் எண்ணினர்.

அந்த பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் செல்லியம்மன் சிலை ஒன்றை கண்டெடுக்கப்பட்டது. அந்த சிலையும் இந்த ஆலயத்திலேயே வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. கருப்பண்ணசாமிக்கு அசைவ படையல் இருந்தாலும், அம்மனுக்கு சைவ படையல் என்ற அளவில் தனி சன்னிதியாக தான் பக்தர்களுக்கு அருள்பாலிக் கிறார். இந்த அம்மன் சன்னிதியில், கன்னிமார் எழுவர் சிலையும், ஒரே கல்லில் வரிசையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீங்களும் ஜட்ஜ் சாமியிடம் மனு கொடுத்து உங்களின் பிரச்சினைக்கு தீர்வு காண இந்த கோவிலுக்கு வந்து சாமியின் அருளை பெற்று செல்லலாம்.

மனு எழுதி வழிபாடு:

நாவலடி கருப்பண்ணசாமி நீதிமான். எனவே இவரை ஜட்ஜ் என்று அழைப்பது பழைய கால வரலாறு. இதன் அடிப் படையில் பக்தர்கள் பிராது என்ற கோரிக்கை மனுவை எழுதி பூசாரிகள் மூலமாக நாவலடியான் பாதத்தில் வைத்து அதற்கான இடத்தில் கட்டுவது ஐதீகம். இந்த வழிபாட்டு முறை பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது.

பக்தர்கள், தங்களது பிணி நீங்கவும், விவசாயம் செழிக்கவும், குழந்தை வரம், வராக்கடன் கிடைக்கவும் இத்தல இறைவனை வேண்டிக்கொள்கின்றனர். மேலும் முற்றுப்பெறாத நிலப்பிரச்சினை, நிலம், வீடு வாங்குவது, விற்பது தொடர்பான பிரச்சினைகள், வேலையின்மை, படிப்பு, திருமணம் என தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி சமர்ப்பிக்கின்றனர்.

பக்தர்கள் இவ்வாறு சமர்ப்பித்த மனுக்கள், நாவல் மற்றும் வேப்ப மரத்தில் மலைபோல குவிந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலில் பூஜைகள் நடைபெறும். சிறப்பு பூஜையாக இரவு 12 மணிக்கு மேல் நாவலடியானுக்கு சத்திய பூஜை நடைபெறும். சத்திய பூஜைக்கு மல்லிகை, சம்பங்கி மலர்கள் பயன்படுத்தப்படும். சாமிக்கு செவ்வரளி, மல்லிகை, சம்பங்கி, செவ்வந்தி, ரோஜா போன்ற பூக்களால் மலர் பந்தலிட்டு வழிபாடு நடைபெறும்.

மனு எழுதும் முறை :

நாவலடியானிடம் தங்கள் குறைகளை கூறி மனு எழுதி கொடுக்க வருபவர்களும், களவுப்போன பொருட்கள் திரும்ப கிடைப்பதற்கும் இங்கு அது தொடர்பாக கோரிக்கைகளை மனுவாக எழுதி வைக்கிறார்கள்.

கோவில் வளாகத்தில் மனுக்களை எழுதிட கோவில் லெட்டர் பேடில் வெள்ளைத்தாள்கள் மற்றும் மனு எழுத அட்டை மற்றும் அமர்ந்து எழுத இருக்கை வசதிகளும் உள்ளன. இந்த மனுவின் முடிவில், நீங்கள் நினைக்கும் காரியம் ஒரு மாதம் முதல் அல்லது 3 மாதத்திற்குள் கைகூடினால் சாமிக்கு என்ன காணிக்கை கொடுப்பீர்கள் என்பதை எழுத ஒரு வரி இடம் பெற்றுள்ளது.

அதில், பெரும்பாலான பக்தர்கள் தங்கள் சக்திக்கு உட்பட்டு இயன்றதை தருவோம் என்று எழுதுகிறார்கள். சிலர் பணம், பொருளை குறிப்பிட்டும் எழுதுகிறார்கள். பின்னர் கோவில் முத்திரை குத்தப்பட்டு பக்தர்கள் அதை சாமி பாதத்தில் வைத்து வழிபட்டு மரத்தில் கட்டுகிறார்கள். அதேபோல் காரியம் கைகூடியவுடன் அவர்கள் காணிக்கை செலுத்த வருவதும் தொடர்கிறது என்பதை காணும் போது நாவலடியானின் மகிமை கண்கூடாக தெரிகிறது.