இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்பதால் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
ராஞ்சியில் நடைபெற்ற 3-வது போட்டியின்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் தரம்சாலாவில் நேற்றும் இன்றும் கோலி பயிற்சியில் ஈடுபடவில்லை.
இதனால் நாளைய போட்டியில் அவர் களம் இறங்குவாரா? என்ற கேள்வி எழுந்தது. இன்று காலை பேட்டியளித்த விராட் கோலி, ‘கேப்டனுக்கு ஒரு விதிமுறை, மற்ற வீரர்களுக்கு ஒரு விதிமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை. எனது காயம் 100 சதவீதம் குணமடைந்தால் மட்டுமே களம் இறங்குவேன். நாளை காலை உடற்தகுதி டெஸ்டை பொறுத்துதான், தரம்சாலா டெஸ்டில் களம் இறங்குவது குறித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.
இதனால் விராட் கோலி 90 சதவீதம் இடம்பெற வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. ஆகவே, ரகானே கேப்டன் பொறுப்பை ஏற்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் கூறுகையில் ‘‘விராட் கோலி இல்லாதது இந்திய அணிக்கு பலவீனம் என்று நான் கருதவில்லை. அவர்கள் நல்ல நிலைமையில்தான் இருக்கிறார்கள். இந்திய அணிக்கு ரகானே கேப்டன் பதவியை ஏற்பார் என்று நினைக்கிறேன்.
ராஞ்சி டெஸ்டில் விராட் கோலி காயத்தால் வெளியே இருந்தபோது, ரகானே சிறந்த முறையில் கேப்டன் பதவியை பார்த்துக் கொண்டார். ஆகவே, அவர் இந்திய அணியின் கேப்டன் பதவியை சிறந்த முறையில் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
ஆடுகளத்திற்கு வெளியே ரகானே சற்று அமைதியான நபர். பொதுவாக அவர் அதிக அளவில் உணர்ச்சிவசப் படமாட்டார். கிரிக்கெட்டை பற்றி நல்ல அறிந்தவரான, புரிந்தவரான ரகானேவுடன் போதுமான நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கோலி இந்த போட்டியில் விளையாடவில்லை என்றாலும், இந்திய அணி நல்ல கேப்டனை கொண்டுள்ளது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்.
ஷ்ரேயாஸ் அய்யர் ஆக்ரோஷமான வீரர். என்னுடைய ஞாபகம் சரியாக இருந்தால், பயிற்சி ஆட்டத்தில் முதல் பந்தை சிக்கருக்கு தூக்கினார். அவரது சிறந்த ஆட்டம், பேட்டிங் செய்வதற்கு உகந்த ஆடுகளத்தில் வெளிப்பட்டது. அந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லை. அதேபோல் ஹசில்வுட், ஸ்டார்க் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடவில்லை. ஆகவே, அங்கு அய்யர் சிறப்பாக விளையாடினார். அது ஒரு பயிற்சி போட்டிதான். ஆனாலும், எதிர்காலத்தில் அவருக்கு நல்ல வாய்ப்புள்ளது’’ என்றார்.