செய்தியை விற்க முயற்சி செய்கிறார்கள்: ஆஸி. பத்திரிகைக்கு விராட் பதிலடி

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் (4-வது டெஸ்ட்) தரம்சாலாவில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டி அளித்தார்.

அப்போது உலக விளையாட்டின் டிரம்ப் போல் விராட் கோலி செயல்படுகிறார் என்பது போன்ற விமர்சனத்திற்கு பதில் அளித்த கோலி, ஆஸ்திரேலிய பத்திரிகை செய்தியை விற்க முயற்சி செய்து வருகிறது என்று பதிலடி கொடுத்தார்.

இதுகுறித்து விராட் கோலி மேலும் கூறுகையில் ‘‘இதுபோன்ற சில விஷயங்கள் கிரிக்கெட் ஆட்டத்திற்கு வெளியே நடக்கும். நான் ஒரு கிரிக்கெட் வீரராகவும், என்னுடைய தரத்தையும் உயர்த்துவதிலும்தான் கவனம் செலுத்துவேன். என்னுடைய அணி வீரர்கள் மற்றும் என்னை மிகவும் நெருங்கியுள்ளவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதில் மட்டும்தான் அக்கறை செலுத்துவேன்.

என்னைப் பற்றிய விமர்சனங்கள் என்னை ஒன்றும் செய்யாது. அவர்கள் எனக்கு ஒரு விஷயமே இல்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை தொடக்கத்திலும், இதற்கு முன்பும் இதுபோன்ற விமர்சனங்களை சந்தித்துள்ளேன்.

எனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ, அந்த விஷயத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதிலிருந்து ஒருபோதும் மாறமாட்டேன். என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் ஏராளமானோர் கவலைப்படுவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. அவர்களுக்கு வாழ்த்துக்கள். என்னைக் குறித்த அவர்களுடைய செய்தி விற்பனையானால், அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’’ என்றார்.