டி20 கிரிக்கெட் தரவரிசை: 3-வது இடத்தை பிடிக்க பாகிஸ்தான், வெ.இண்டீசுக்கு வாய்ப்பு

பாகிஸ்தான் அணி மூன்று வகை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 26-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) தொடங்குகிறது.

தற்போது ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தரவரிசையில் நியூசிலாந்து 127 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்தியா 124 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 117 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 116 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், இங்கிலாந்து 116 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், பாகிஸ்தான் 113 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன.

நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் வெஸ்ட் இண்டீஸ் 116 புள்ளிகளில் இருந்து 7 புள்ளிகள் அதிகம் பெற்று 123 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறும். ஒருவேளை 3-1 என வெற்றி பெற்றால் 119 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கும்.

பாகிஸ்தான் 4-0 என வெற்றி பெற்றால் 118 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறும். மாறாக 3-1 என வெற்றிபெற்றால் 116 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடிக்கும்.

வெஸ்ட் இண்டீஸ் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் (வெஸ்ட் இண்டீஸ் – 123, பாகிஸ்தான் – 109)
வெஸ்ட் இண்டீஸ் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் (வெஸ்ட் இண்டீஸ் 119, பாகிஸ்தான்- 111)

தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தால் (வெஸ்ட் இண்டீஸ் 115, பாகிஸ்தான் 114)

பாகிஸ்தான் 4-0 என வெற்றி பெற்றால் (பாகிஸ்தான்- 118, வெஸ்ட் இண்டீஸ்- 108)
பாகிஸ்தான் 3-1 என வெற்றி பெற்றால் (பாகிஸ்தான் – 116, வெஸ்ட் இண்டீஸ் – 112)

இரு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டியில் நேரடியாக தகுதி பெற முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.