சினிமாவில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது: இயக்குனர் பேரரசு

திரைப்பட இயக்குனர் பேரரசு ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிவகாசி, திருப்பாச்சி, திருப்பதி உள்பட 9 படங்களை நான் இதுவரை இயக்கி உள்ளேன். எனது 10-வது படம் வருகிற மே மாதம் தொடங்க உள்ளது. ஊர் பெயர் எனது அடைமொழியாக இருப்பதால் தயாரிப்பாளர்கள் என் படத்துக்கு ஊர் பெயர் வைக்க சொல்கிறார்கள். அதன்பேரில் நான் இயக்கிய அனைத்து படங்களுக்கும் ஊர் பெயரையே தலைப்பாக வைத்துள்ளேன்.

தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாக வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளேன். நமது பண்பாடு, கலாசாரம் அழிந்து வருகிறது. அதை சினிமா மூலம் பதிவு செய்யவேண்டும். நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் எடுப்பது எனது நீண்ட கால விருப்பமாக உள்ளது.

நடிக்க பயமாக இருப்பதால் கதாநாயகனாகும் ஆசை எனக்கு இல்லை. முக்கியமான கதாபாத்திரமாக இருந்தால் நடிகனாக இல்லாமல் நடிப்பேன். புதிதாக வரும் தயாரிப்பாளர்களில் 80 சதவீதம் பேருக்கு தொழில் அனுபவம் இல்லை. அதனால் செலவு அதிகமாகி, படம் தரம் இல்லாமல் போய் விடுகிறது.

நடிகர் எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு அரசியல் விமர்சன படங்கள் வரவில்லை. அரசியல் சார்ந்த தலைப்பு வைக்கக்கூட முடியவில்லை. மீறி வைக்கும் பட்சத்தில் படம் வெளியாகும் நேரத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேர்கிறது. அரசியல் தலையீடு தற்போது சினிமாவில் அதிக அளவில் உள்ளது.

சினிமா துறைக்கு அரசு ரீதியாக எந்த உதவியும் கிடைப்பதில்லை. தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு உண்டு என்கிறார்கள். ஆனால் படக்குழுவினர் படத்தை பார்த்துவிட்டு முடிவு செய்த பின்னர்தான் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

தமிழில் தலைப்பு வைத்தால் மட்டும் தமிழை காப்பாற்ற முடியாது. தனியார் பள்ளிக்கூடங்களில் ஆங்கிலம், இந்திக்கு கொடுக்கும் முக்கியத்துவம், தமிழுக்கு கொடுக்கப்படுவதில்லை. எனவே தனியார் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக தமிழ் பாடம் இருக்கவேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மக்கள் மீது உண்மையான அக்கறை, சேவை மனப்பான்மை உள்ளவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அப்படி வருபவர்கள் சராசரி மனிதனாக இருக்கவேண்டும். மக்கள் நேசிப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. மக்களை நேசிப்பவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

பொழுதுபோக்கு படம் எடுங்கள். பொழுது போக்குக்காக சினிமா படம் எடுக்க வராதீர்கள். மக்களுக்காக யார் குரல் கொடுத்தாலும், அவர்களுக்கு மக்கள் ஆதரவு கொடுக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுப்பார்கள்.

இவ்வாறு இயக்குனர் பேரரசு கூறினார்.