புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கம் அவசர சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னர் இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்குறுதியளித்தது போல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படும் எனவும் அதற்கான பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகளின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி எதிராக எதிரணியில் இருந்த சிலர், தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு, இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் பேச்சாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக பாடுபட்ட ஒரு சிலர், சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை, அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணங்காது என கூறி வருவதாகவும் அரசாங்கம் ஒருபோதும் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் சிக்காது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.