வேலையற்ற பட்டதாரிகளுக்கு சராசரியாக 35 வயதை எட்டிய நிலையில் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
கடந்த 24 ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் வேலையற்ற பட்டதாரிகளுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சந்திப்பின் போது வேலையற்ற பட்டதாரிகள் சார்பில் 6 பிரதிநிதிகள் என்னுடன் தமது பிரச்சினைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அவர்கள் தமது படிப்பை முடித்த பின் பல வருடங்களாக வேலையற்ற பட்டதாரிகளாகவிருப்பதாகவும் சராசரியாக 35 வயதை எட்டிய நிலையில் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை எடுத்துக்கூறினார்கள்.
அடுத்த மாணவத்தலைமுறையினர் தாம் வேலையற்றிருப்பதைப்பார்த்து படிப்பதைத் தொடராது புறக்கணிக்கும் நிலை ஏற்படக்கூடுமெனவும் கூறினார்கள்.
எமக்குக் கிடைக்கப்பெற்ற தரவுகளின் படி தற்பொழுது வெற்றிடங்கள் 1051 ஆகவிருப்பதையெடுத்துக்காட்டி அவற்றை நிரப்ப நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருப்பதாகக் கூறினேன்.
அவற்றில் பல வெற்றிடயங்கள் கணிதம் , விஞ்ஞானம் போன்ற பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானவை. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பட்டதாரிகளில் அவ்வாறானவர்கள் மிகக் குறைவே என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இதன் பொருட்டு அவர்களை வேறு துறைகளில் ஈடுபடுத்துவது பற்றியும் பேசப்பட்டது.
சுற்றுலாத்துறை, தொழில்முயற்சிகள், ஆடைத்தொழில்நிறுவனங்களில் முகாமைத்துவத்தரப்பயிற்சி, பொலிஸ் திணைக்களத்தில் உதவி அத்தியட்சகர் தரப்பதவிகள் போன்றவற்றில் வெற்றிடங்கள் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
அவர்கள் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள வடமாகாண வெற்றிடங்கள் சுமார் 2000 அளவில் இருப்பதாகக் கூறினார்கள். அவை பற்றி ஆளுநர் ஊடாக அறிந்து கொள்ள முடியும் எனக் கூறினேன்.
தொண்டர் ஆசிரியர் சம்பந்தமாக சில விடயங்களைக் குறிப்பிட்டார்கள்.
வருடாவருடம் தொண்டர் ஆசிரியர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாகவும் அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்ததாகவும் அவர்கள் வேலையை தம்மாலும் ஏற்றுக்கொள்ளமுடியும் எனவும் கூறினார்கள்.
எக்காலத்திலிருந்து கற்பித்த தொண்டர் ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றிய மத்திய அரசாங்க சுற்றுநிரூபம் இருப்பதையெடுத்துக்கூறி பட்டதாரிகள் அவ் வெற்றிடங்கள் ஏற்படின் அவற்றை நிரப்பமுடியாதென அறிவித்தேன்.
தொண்டர் ஆசிரியர் கல்வித் தகைமை க.பொ.த சாதாரண அல்லது உயர் தரமே அன்றிப் பட்டப்படிப்பல்ல என்பதை எடுத்துக் கூறினேன்.
அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்கள் சம்பந்தமாகவும் அதேபதில் வழங்கப்பட்டது. அதாவது அப்பதவிகளுக்கு பட்டதாரிகளை நியமித்தால் குறைந்த கல்வித்தகைமைகளை உடையவர்களுக்கு வேலைவாய்ப்பில்லாமல் போகும் என்பதை தெரிவித்தேன்.
கடைசியாக அத்தனை வேலையற்ற பட்டதாரிகளின் சுய விபரங்களையும் ஆண்டு ரீதியாக கற்ற பாடங்களின் அடிப்படையில் பட்டியலாகத் தயாரித்து 28.03.2017க்கு முன் அனுப்பிவைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டேன்.
அத்துடன் அரசாங்க உத்தியோகங்கள் கிடைக்காதவர்களுக்கு தனியார்துறையில் வேலையில் சேர்வது பற்றி அவர்களின் விருப்புகளைத் தருமாறும் கோரினேன்.
அவர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் தரவுகளை வைத்து கொழும்பு செல்லும் போது நான் இவைபற்றி உரிய அமைச்சருடன் பேசுவதாக அவர்களுக்குத் தெரிவித்தேன் எனவும் கூட்டம் சுமூகமாக முடிவுற்றது என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.