வடக்கு பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட காரணத்தினால், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தம்மிடம் கூறினார் என முன்னாள் பிரதி அமைச்சர் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
திலீபனின் மரணத்தின் பின்னர் நாம் போருக்கு ஆயத்தமாகியிருந்தோம்.
வல்வெட்டித்துறையில் இராணுவ ஜீப் வண்டியொன்றின் மீது திடீர் தாக்குதல் நடத்தினோம்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் இந்திய இராணுவத்தினர் தொடர் தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர்.
வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருந்தனர்.
அந்தக் காலத்தில் பெரிதாக போர் இல்லை என்பதனால் நான் வடக்கில் பிரபாகரனுடன் இருந்தேன்.
அப்போது பிரபாகரன் என்னை அழைத்து “ நீ கிழக்கிற்கு போக வேண்டும்” என உத்தரவிட்டார்.
நான் கிழக்கிற்கு செல்ல சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக பிரபாகரன், ராஜீவை கொலை செய்ய வேண்டுமென கூறினார்.அது இவ்வாறு நடந்தது.
இந்திய இராணுவம் மிகவும் விசாலமானது. அவர்கள் தாக்குதல் நடத்தி முன்னேறி வந்தனர்.அவர்கள் பிடிக்கும் கிராமங்களில் வசித்து வந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இது குறித்து பிரபாகரன் கடும் கோபத்துடன் இருந்தார்.
இறுதியில் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட ஒன்பது பெண்களை இந்திய இராணுவத்தினர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியிருந்தனர்.
இந்த பெண்கள் கடுமையாக நோய் வாய்ப்பட்டனர், அவர்கள் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனை அறிந்து கொண்ட பிரபாகரன் “ நாம் ராஜீவ் காந்தியை கொலை செய்ய வேண்டும்” என என்னிடம் கூறினார் என கருணா தெரிவித்துள்ளார்.