ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானங்கள் (டிரோன்) மூலம் குண்டுவீச்சு நடத்தி தீவிரவாதிகளை அழித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பத்திகா மாகாணத்தில் அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர்கள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதை தொடர்ந்து அங்கிருந்த மறைவிடங்கள் மீது அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் குண்டுவீச்சு நடத்தின. அதில் அல்கொய்தா மூத்த தலைவர் குவாரி யாசின் கொல்லப்பட்டார்.
இத்தகவலை அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது. கொல்லப்பட்ட குவாரி யாசின் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தி வந்தார்.
2008-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந்தேதி இஸ்லாமாபாத்தில் உள்ள மாரியபட் ஓட்டலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி 2 அமெரிக்கர் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தார். 2009-ம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதிலும் இவர் முக்கிய பங்கு வகித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்கப்புரியாகவும், அடைக்கலப் பகுதியாகவும் உள்ளது என ஆப்கானிஸ்தான் ஏற்கனவே குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.