‘சைனமேன்’ பந்து மூலம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்த குல்தீப் யாதவ்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் இன்று தொடங்கியது. ராஞ்சியில் நடைபெற்ற போட்டி டிராவில் முடிவடைந்தது. இதற்கு இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடாததுதான் காரணம் என்று கூறப்பட்டது.

அந்த போட்டியில் காயம் அடைந்த விராட் கோலி, முழு உடற்தகுதி பெறாததால் இன்றைய போட்டியில் அவர் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3-வது சுழற்பந்து வீச்சாளரை களம் இறக்கியது இந்தியா.

அந்த சுழற்பந்து வீச்சாளர்தான் 22 வயதான இளைஞர் குல்தீப் யாதவ். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இவர் 288-வது வீரராக இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார். அஸ்வின் ஆஃப் ஸ்பின்னர், ஜடேஜா லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர் என்று அழைக்கப்படுவது போல், இவர் லெஃப்ட் ஆர்ம் சைனமேன் பந்து வீச்சாளர் என்று அழைக்கபட்டு வருகிறார்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிராட் ஹாக், தென்ஆப்பிரிக்காவின் பால் ஆடம்ஸ் ஆகியோர் ‘சைனமேன்’ வகை பந்து வீச்சாளர்கள்.

இன்றைய போட்டியில் ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா மதிய உணவு இடைவேளை வரை 31 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. சராசரி 4.22 ஆகும். வார்னர் 54 ரன்னுடனும், ஸ்மித் 72 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆடுகளம் பேட்டிங் செய்ய அதிக அளவில் ஒத்துழைப்பு கொடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா எப்படியும் முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல் குவித்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 4-வது ஓவரில் ஆட்டத்தின் போக்கு மாறியது. 35-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் வார்னர் ஸ்லிப் திசையில் நின்ற ரகானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

குல்தீப் யாதவ் தனது 4-வது ஓவரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டாக வார்னரை வீழ்த்தி முத்திரை படைத்தார். அத்துடன் சைனமேன் பந்தில் பல்வேறு மாறுபட்ட பந்துகளை (கூக்ளி, லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின்) வீசி ஆஸ்திரேலியாவை திணறடித்தார்.

ராஞ்சி போட்டி டிராவில் முடிவதற்கு காரணமாக இருந்த ஹேண்ட்ஸ்காம்ப்-ஐ 8 ரன்னில் வீழ்த்தினார். அத்துடன் ராஞ்சியில் சதம் அடித்த மேக்ஸ்வெல்லையும் 8 ரன்னில் வெளியேற்றினார். முக்கிய மூன்று விக்கெட்டையும் வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலியா 300 ரன்னுக்கள் சுருண்டது.

அஸ்வின், ஜடேஜா பந்துகளை நேர்த்தியாக எதிர்கொண்ட ஆஸ்திரேலிய வீரர்களை தனது மாயாஜால சைனமேன் பந்தால் திணறடித்துவிட்டார் குல்தீப் யாதவ். முதல் இன்னிங்சில் குல்தீப் யாதவ் 23 ஓவர்கள் வீசி 68 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.