பச்சை எலிக்கறி தின்று தமிழக விவசாயிகள் போராட்டம்… டெல்லியில் கொடூரம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 14வது நாளாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை, மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரியும், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று 14வது நாளாக டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதுவரை மண்டை ஓடுகளை அணிந்தும், கழுத்திற்கு சுருக்கு கயிறுகளை போட்டும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் இன்று பச்சை எலியை கடித்து தின்று போராட்டம் நடத்தி வருகின்றனர். பார்ப்பதற்கே கொடுமையாக உள்ள இந்தப் போராட்டத்தை டெல்லியில் விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.

நகை ஏல நோட்டீஸ் இதுகுறித்து, “சரியான மழை இல்லை. ஆடு மாடுகளுக்கே தண்ணீர் இல்லை. மனைவிமார்களின் நகைகளை வைத்து விவசாயம் பார்த்தோம். பயிர்கள் காய்ந்துவிட்டது. வங்கிகளில் இருந்து வார வாரம் நகை ஏல நோட்டீஸ் வந்து கொண்டே இருக்கிறது. டெல்லி வந்தால் பிரச்சனை தீரும் என்று எண்ணி இங்கு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் விவசாயி வெங்கடாச்சலம்.

உண்பதற்கு உணவில்லை “மேலும் மேலும் கடன் வாங்கித்தான் விவசாயம் செய்ய வேண்டி இருக்கிறது. 2007 ம் ஆண்டு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வங்கியில் இருந்து கடன் வாங்கினேன். ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை திரும்பிச் செலுத்திவிட்டேன்.

ஆனால் 5 லட்சத்து 68 ஆயிரத்து 200 ரூபாய் கேஸ் கோட்டிருக்கிறார்கள். இது போன்று 4 கடன்களை வாங்கி ஏற்கனவே கட்டி இருக்கேன். கடனை வாங்கி கடனைக் கட்டுவதே எங்கள் தொழிலாக மாறிவிட்டது” என்கிறார் திருச்சியை சேர்ந்த விவசாயி ஒருவர். மத்திய அரசின் பதில் என்ன? இது குறித்து பலமுறை தமிழக அரசுக்கு எடுத்துக் கூறி வந்து அதனை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை.

டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்தியும் மாநில அரசின் முதல்வர் பழனிசாமியோ அல்லது பிரதமர் மோடியே இதுகுறித்து ஒன்றும் இதுவரை பேசவும் இல்லை.

விவசாயிகளை சந்தித்து பேசவும் இல்லை. மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மட்டும், போராட்டத்தைக் கைவிடுமாறு கூறினாரே தவிர அவரும் கோரிக்கை நிறைவேற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவேதான் இன்று எலி கறி தின்னும் போராட்டத்தை செய்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் விவசாயிகள்.