நடிகை டாப்சி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழ், தெலுங்கில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்துள்ளேன். ரசிகர்களும் வரவேற்பு அளித்தார்கள். இந்தியில் 6 படங்களில் நடித்து இருக்கிறேன். அமிதாப்பச்சனுடன் நடித்த பிங்க் படம் திருப்புமுனையாக அமைந்தது. நான் பெண் உளவாளியாக நடித்துள்ள ‘நாம் சபானா’ இந்தி படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது. தமிழில் இந்த படம் ‘நான்தான் சபானா’ என்ற பெயரில் வெளியாகிறது.
இதில் அக்ஷய்குமார், பிரித்விராஜ், மனோஜ் பாஜ்பாய், அனுபம்கேர் ஆகியோரும் நடித்துள்ளனர். ஷிவம் நாயர் டைரக்டு செய்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. நான் பெண் உளவாளியாக ஜேம்ஸ் பாண்ட் பாணியில் அதிரடி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு வருடம் கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றேன். இந்தியில் கதாநாயகியை மையப்படுத்தும் படங்கள் அதிகம் தயாராகின்றன. இதுபோன்ற படங்கள் வெளிவருவதற்கு முன்னணி கதாநாயகர்களும் உதவுகிறார்கள். இது நல்ல மாற்றமாக தெரிகிறது.
சமூகத்தில் பாலியல் குற்றங்கள் நடப்பதற்கு சினிமா காரணமாக இருக்கிறது என்று விமர்சிக்கப்படுவதை ஏற்க முடியாது. சினிமாவில் நல்ல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. அவற்றை ரசிகர்கள் பின்பற்ற வேண்டும். மோசமான கருத்துக்களை ஒதுக்க வேண்டும். பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களே, தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதற்காக தற்காப்பு கலைகளை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
பாலியல் தொல்லைகள் நேரும்போது எப்படி தப்பிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வீடியோ படமொன்றை வெளியிட்டு இருக்கிறேன். பாலியல் துன்புறுத்தல்கள் நேரும்போது பெண்கள் பயந்து விடுகிறார்கள். இதனால் எதிர்த்து போராட வேண்டும் என்கிற தைரியத்தை அவர்கள் இழந்து விடுகின்றனர். பெண்கள் பயப்படாமல் அதனை சந்திக்க வேண்டும், பாலியல் தொல்லை கொடுப்பவனை அடித்து தாக்கி விரட்ட வேண்டும். இதற்காக எளிமையான தற்காப்பு கலைகளை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு டாப்சி கூறினார்.