தமிழகமே எதிர்க்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் கையெழுத்திட ஜெம் நிறுவன அதிகாரிகள் டெல்லிக்கு வந்துள்ளனர்.
நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு கடந்த மாதம் 14-ஆம் தேதி அறிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் போராடி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் இந்த திட்டம் செயல்படுத்தப்படாது என்று உறுதியளித்தனர்.
மக்களின் போராட்டத்தை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு 27 பொதுத் துறை நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஜெம் லேபாரட்டரீஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
அதன்படி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஜெம் நிறுவன அதிகாரிகள் டெல்லி தாஜ் மான்சிங் ஹோட்டலுக்கு வந்துள்ளனர். நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தம் ஜெம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.