ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு தேர்தல் ஆணையம் படகு சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அதிமுக சார்பில் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. ஒன்று பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி, இரட்டை மின் விளக்கு சின்னத்திலும், சசிகலா அணி சார்பில் அதிமுக அம்மா என்ற பெயரில் தொப்பி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக டிடிவி தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ், மதிவாணன், லோகநாதன், கங்கை அமரன், கலைக்கோட்டுதயம், தீபா ஆகியோர் களத்தில் உள்ளனர். அதிமுக தொண்டர்களின் வாக்கு யாருக்கு அதிகமாக கிடைக்கும் என்பதே இரு அணியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த முறை ஜெயலலிதா வெற்றி பெற ஒன்றாக நின்றவர்கள், இம்முறை பிரிந்துள்ளதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கூடவே தீபாவும் அதிமுக தொண்டர்களின் வாக்குகளை பெற களத்தில் உள்ளார்.
முக்கிய வேட்பாளர்களுக்கு மாற்று வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்து இருப்பவர்கள் இன்று வாபஸ் பெற்றனர். அவர்கள் வாபஸ் பெற்ற பின்னர் 8 சுயேட்சை வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இடைத்தேர்தல் களத்தில் 62 பேர்களத்தில் உள்ளனர்.
தேர்தல் ஆணையம் இன்று சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னத்தை ஒதுக்கி வருகிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு படகு சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் இந்த சின்னத்தை தீபாவிற்கு ஒதுக்கியுள்ளார்.
இவர் இரட்டை இலையை மீட்பேன் என்று கூறி வந்தார். இப்போது எம்ஜிஆர் படகோட்டி, மீனவ நண்பன் போல ஆர்.கே. நகரில் போட்டியிடும் தீபாவிற்கு படகு சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இவரும் எம்ஜிஆர் பெயரை சொல்லி வாக்கு கேட்பார் என்பதில் சந்தேகமில்லை.