ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தின் போது, ஆண் குழந்தைக்கு நெற்றியில் முத்தமிட்டு ராமச்சந்திரன் என பெயர் சூட்டியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவடைந்ததை அடுத்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அங்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரன், பாஜக சார்பில் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, சிபிஎம் லோகநாதன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி.தினகரன் தொடர்ந்து வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தொண்டர்களுடன் தொப்பி அணிந்த படி நடந்து சென்றும், வாகனத்தில் சென்றும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திமுக வேட்பாளரான மருது கணேஷ்., நேதாஜி நகர், கலைஞர் நகர், இந்திரா காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து உதயசூரியனுக்கு வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார்.
அவரை அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதேபோல் மதுசூதனனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மக்கள் அலை, அலையாய் வந்து ஆதரவு தெரிவித்தனர். வேட்பாளர் மதுசூதனனுடன், பன்னீர் செல்வம் திறநத் ஜீப்பில் நின்றபடி பிரசாரத்தில் ஈடுபட்டார். மேள தாளங்கள் முழங்க திரளான தொண்டர்கள் அதில் பங்கேற்று வீதி, வீதியாக வாக்கு சேகரித்தனர்.
அப்போது ஒரு தம்பதியின் குழந்தைக்கு நெற்றியில் முத்தமிட்டு ராமச்சந்திரன் என ஓ.பன்னீர்செல்வம் பெயர் சூட்டினார். ஜெயலலிதாவை பச்சிளம் குழந்தைகளையோடு சந்திக்கும் பெற்றோர் மனம் குளிர அவரும் பெயர் சூட்டி மகிழ்வது வழக்கம். புலிக் குட்டிகளுக்கு கூட பெயர் சூட்டி மகிழ்வது ஜெயலலிதாவின் வழக்கம். இப்போது அவரது செயல்பாடுகளை ஓ.பன்னீர்செல்வம் பின்தொடர ஆரம்பித்துள்ளார்.