அண்ணனுக்கு ஸ்ட்ராங்கா ஒரு டீ… ஆர்.கே.நகரில் களைகட்டிய கங்கை அமரன் பிரசாரம்!!

ஆர்.கே.நகர் பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் தம்முடன் பிரசாரத்துக்கு உடன் வந்தவர்களுக்கும் டீ வாங்கிக் கொடுத்து அசத்தினார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரன், பாஜக சார்பில் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, சிபிஎம் லோகநாதன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

டிடிவி தினகரன் தலைமையிலான அதிமுக அம்மா கட்சிக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கொளுத்தும் வெயிலில் தொப்பி அணிந்து வீதி வீதியாக ஓட்டு கேட்டு வருகிறார் தினகரன். அதோபோல் மதுசூதனனை ஆதரித்து ஓபிஎஸ் தரப்பும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு தற்போது தான் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் இனிமேல் தான் அவர் பிரசாரத்தை துவங்க உள்ளார்.

திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து முன்னாள் மேயர் சுப்பிரமணியம் வாக்கு சேகரித்து வருகிறார். தேமுதிக வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதாக இருந்த நிலையில், அவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் ஓய்வு எடுப்பதற்காக விஜயகாந்தின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்களிடம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

பாஜக சார்பில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் கங்கை அமரனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தண்டையார் பேட்டை பகுதியில் வீதிகளில் நடந்து சென்றே இன்று பிரசாரம் மேற்கொண்டிருந்தார் கங்கை அமரன். அப்போது அந்தப் பகுதியில் உள்ள டீ கடைக்கு வாக்கு சேகரித்தார். பிரசாரத்துக்கு உடன் வந்தவர்களுக்கும் டீ வாங்கிக் கொடுத்து அசத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் ஆராவாரம் செய்தனர். தொண்டர்களும் உற்சாகமடைந்தனர்.