ரஜினி தற்போது நடித்துவரும் 2.ஓ படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு ரஜினியை சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும்படி லைக்கா நிறுவனமும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, ரஜினியும் இலங்கை பயணத்திற்கு ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், ரஜினி இலங்கை செல்வதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ரஜினி தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தார். இருப்பினும், ரஜினி குறித்து ஒரு சில தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தலைவர் ரஜினிகாந்த் குறித்து பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள். அவரது ரசிகன் மற்றும் தொண்டன் என்ற முறையில், அவர் ஏன் என்னுடைய தலைவராக இருக்கிறார் என்பது குறித்து இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
பத்து பேர் இருந்தாலே கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படும் இக்காலத்தில், கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தும் அரசியல் நாற்காலிக்கு ஆசைப்படாதவர்தான் என் தலைவர். இத்தனை பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் என் தலைவர், ஆறு மாதத்திற்குள் ஒரு படம் நடித்து, அதை வெளியிட்டு மிக எளிதாக பணம் சம்பாதிக்கலாம்.
ஆனால், ஒரு படத்திற்காக இரண்டு அல்லது மூன்று வருடம் வரை அவர் எடுத்துக்கொள்வதில் இருந்தே அவர் பணத்தின் மீது ஆசை இல்லாதவர் என்று தெரிகிறது. நம்முடைய பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்தபோது அவர் சந்திக்க விரும்பிய, சந்தித்த ஒரே தலைவரும் சூப்பர் ஸ்டாராகத்தான் இருக்கும். இதிலிருந்தே அவருடைய நல்ல எண்ணமும், தூய உள்ளமும் தெரிய வருகிறது.
இந்தியாவிலேயே நட்சத்திர அந்தஸ்தில் உச்சத்தில் இருக்கும்போதும், நாட்டிலேயே மிகப் பிரபலமான நடிகராக இருக்கும்போதும் எந்தவிதமான ஆசையும், ஆணவமும் இல்லாமல் ஆன்மீக வழியை தேர்ந்தெடுத்து பயணம் செய்பவர் ரஜினி. இதுவெல்லாம் தலைவரை மதித்து வணக்கும் என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, கோடிக்கணக்கான மக்கள் அவரை நேசிப்பதற்கு காரணம் இதுதான்.
சிலர், அவரைக் குறித்து தவறாக பேச நினைக்கலாம். ஆனால், அவரை நன்கு தெரிந்தவர்கள் அவரை மதித்து வணங்குவார்கள். அந்த கோடிக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன் என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.