பிள்ளைகள் பரீட்சைகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்றாலும் அவர்கள் ஒழுக்க ரீதியில் சீர்கெட்டு போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி பேர்கசன் உயர் பெண்கள் பாடசாலையின் நூற்றாண்டு விழாவில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஒருவர் சிறப்பாக வெற்றிப் பெறவும் மற்றுமொரு பிள்ளை பெரிய குற்றவாளியாக மாறவும் காரணமாக அமைந்துள்ள சமூக முரண்பாடுகளை நாம் தெளிவாக அடையாளம் காண வேண்டும்.
ஞாயிறு பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் தலையங்கம் எனக்கு நினைவுக்கு வருகிறது. பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பாக அதில் எழுதப்பட்டிருந்தது. அதனை நான் இரண்டு முறை வாசித்தேன்.
நாட்டின் பாடசாலை மாணவர்கள் பரீட்சைகளில் சிறப்பாக தேர்ச்சி பெறுகின்றனர்.
எனினும் சமூகத்தில் இருந்து வரும் தகவல்களை எடுத்துக்கொண்டால் பாடசாலை மாணவர்களின் ஒழுக்க சீர்கேடு தொடர்பான பிரச்சினை உள்ளது.
மிகிந்தலையில்ட பாடசாலை ஒன்றின் 11 ஆண்டு மாணவர்கள் ஒரு மாணவனின் பிறந்த தினத்தை பாடசாலை நேரத்தில் பாடசாலை மைதானத்தில் சாராய போத்தலை திறந்து கொண்டாடியுள்ளனர்.
இதற்கு சில தினங்களுக்கு முன்னர் பொரள்ளையில் உள்ள பெண்கள் பாடசாலைக்குள் மாணவர்கள் சிலர் பலவந்தமாக நுழைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
தற்போதைய அதி நவீன தொழிற்நுட்ப உலகில் பலவேறு துறைகளில் திறமைசாலிகள் உருவாகி வருவது போல், எமது நாட்டில் மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் பாடசாலைகளில் பயிலும் பிள்ளைகளே மிகப் பெரிய குற்றவாளிகளாக மாறுகின்றனர் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.