மைத்திரி பக்கம் சாய்கின்றது கூட்டு எதிர்க்கட்சி : விமலின் நிலையோ கவலைக்கிடம்

அரசாங்கத்திற்குள் பிளவு ஏற்பட்டால் கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் இருக்க வேண்டும் எனவும், சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் தான் யோசனையை முன்வைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பிளவுபட போகின்றது என்று அரசாங்கத்தின் ஆலோசகர்களே கூறுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொரள்ளையில் உள்ள என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனவும் இணைந்து அமைத்துள்ள அரசாங்கம் பிளவுப்பட போகின்றது என்றால், அது பிளவுபட ஆதரவளிக்க வேண்டும்.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத காரணத்தினால் அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு பிணை வழங்குவது அரசாங்கத்தின் கடமை.

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான குழுவில் இருந்து விலகியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இருக்கும் பிரச்சினைகள் இதனை காட்டுகிறது. எதிர்கால சந்ததியினரின் உரிமைகளை இல்லாது செய்யும் காட்டிக்கொடுப்புகள் அதிகரித்துள்ளன.

இதனை சகித்து கொள்ள முடியாத நிலையிலேயே அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கருத்து வெளியிட்டார்.

முத்துஹெட்டிகம போன்றோரும் இதற்காகவே பேசியுள்ளனர் என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.