சித்திரைப் புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம்?

சித்திரைப் புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களுடன் நேற்றிரவு நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது.அவர் மேலும் கூறுகையில்,

உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும், வடமத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலையும் இந்த ஆண்டில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போதைய சட்டங்களின் அடிப்படையில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தேர்தல்களில் வெற்றியீட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.

இங்கிருக்கும் முதலமைச்சர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் சிலர் எனக்கு நேரடியாகவே ஆதரவளிக்கின்றனர்.

எனினும், இங்கும் ஒரு தொகுதி முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் எனக்கு ஆதரவளிக்கவில்லை,

மேலும் ஒரு தரப்பினர் என்ன நடக்கின்றது என்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அந்தப்பக்கமும் இல்லாது இந்தப் பக்கமும் இல்லாது நடுவில் இருக்கின்றார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.