முன்னாள் இராணுவத் தளபதி, அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார்.
கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான தகவல்கள் தெரிந்திருந்தும், சரத் பொன்சேகா நீண்ட காலமாக அவற்றை மூடிமறைத்துள்ளார்.
இவ்வாறு தகவல்களை மூடி மறைத்தமைக்காக சரத் பொன்சேகாவை கைது செய்து விளக்க மறியலில் வைக்க வேண்டும்.
கொலையை தாம் மேற்கொள்ளவில்லை, கபில ஹெந்தவிதாரண தலைமையிலான குழுவே இதனை மேற்கொண்டது என சரத் பொன்சேகா புலனாய்வுப் பிரிவிடம் கூறியுள்ளார்.
இவ்வாறு கூறியதன் மூலம் தாம் குற்றமிழைக்கவில்லை, குற்றவாளிகள் விபரங்கள் தெரிந்தும் அதனை மறைத்ததாக சரத் பொன்சேகாவே ஒப்புக்கொண்டுள்ளார்.
கொலை தொடர்பான தகவல்களை மூடிமறைத்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க கடந்த ஓராண்டு காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அனுர சேனாநாயக்க, இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவில்லை, எனினும் சரத் பொன்சேகா, தகவல்கள் தெரிந்தும் தாம் அதனை வெளிப்படுத்தவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார்.
எனவே சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் என உதய கம்மன்பில கோரியுள்ளார்.