ஜெயலலிதா மகன் என்று உரிமை கோரிய போலிநபரை கைது செய்ய உத்தரவு!!

ஜெயலலிதா மகன் என்று உரிமை கோரிய நபரைக் கைது செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஜெயலலிதா மற்றும் தெலுங்கு நடிகர் சோபன் பாபு ஆகியோருக்கு பிறந்ததாகக் கூறி, மனுதாரர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி (32) என்பவர் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என தெரிந்ததையடுத்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு சென்னை குற்றப்பிரிவு காவல்துறைக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவிட்டார்.

வழக்கு விவரம்: ஜெயலலிதா, சோபன் பாபு ஆகியோருக்கு, கடந்த 1985ம் ஆண்டு பெப்ரவரி 15 ம் தேதி பெங்களூருவில் பிறந்ததாக ஜெ.கிருஷ்ணமூர்த்தி என்பவர் உரிமை கோரினார்.

பெற்றோரிடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, தன்னை அவர்கள் ஈரோட்டில் உள்ள ஒரு தம்பதிக்கு தத்து கொடுத்ததாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு ஆதரவாக, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சாட்சி கையெழுத்து இடம்பெற்ற ஆவணம் (பத்திரம்) ஒன்றையும் கிருஷ்ணமூர்த்தி சமர்ப்பித்தார்.

இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் முன் திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெ.கிருஷ்ணமூர்த்தி (மனுதாரர்) என்பவர், ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி – வசந்தாமணி தம்பதியரின் சொந்த மகன் என்றும், சுப்பிரமணி என்ற பத்திரம் விற்பவரிடமிருந்து முன் தேதியிட்டு பத்திரம் வாங்கி, தான் தத்து கொடுக்கப்பட்டதாகப் போலியாக ஆவணங்களை மனுதாரர் தயாரித்துள்ளார். ஆகையால், அவரது ஆவணங்கள் போலியானது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தீர்ப்பில் பதிவு செய்த நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிமன்றத்துடன் மனுதாரர் விளையாட அனுமதிக்க முடியாது.

அவரைக் கைது செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, விசாரணையை ஏப்ரல் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும், அன்றைய தினம் மனுதாரர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் சென்னை குற்றப்பிரிவு காவல் துறைக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவிட்டார்.