ஆர்.கே. நகரில் விறு விறு பிரச்சாரத்தில் தீபா.. கரை சேருமா படகு!

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் காலையில் இருந்து அனல் பறக்க நடந்து வரும் வேளையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

முக்கிய வேட்பாளர்களான திமுக சார்பில் போட்டியிடும் மருது கணேஷ், அதிமுக அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன், புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் மதுசூதனன், சிபிஎம் சார்பில் போட்டியிடும் லோகநாதன் ஆகியோர் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து சுட்டெரிக்கும் வெயிலிலும் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதியில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தீபா அனல் பறக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தீபா அதனைத் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். படகில் வருகிறாம் தீபாவிற்கு படகு சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் மீனவர்கள் அதிகம் இருப்பதால் ஒருசில இடங்களில் படகில் சென்று ஓட்டு கேட்க தீபா தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

படகோட்டி ஸ்டைலில்.. ஆர்.கே.நகரில் உள்ள மீனவர்கள் பலர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள் என்பதால் படகோட்டி ஸ்டைலில் படகில் சென்று வாக்கு கேட்டால் வாக்குகளை அள்ளி விடலாம் என்று கணக்குப் போட்டுள்ள தீபா, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறாராம்.

படகு வேன் தயார் தீபாவின் பிரச்சாரத்திற்காக சிறப்பு வேன் ஒன்று தயாராகி வருகிறதாம். அந்த வேனும் படகு வடிவத்தில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதாம். விரைவில் படகு வேனில் வந்து தீபா பிரச்சாரம் செய்து ஆர்.கே. நகர் வாக்குகளை அள்ளத் திட்டமிட்டுள்ளாராம்.