தமிழக அமைச்சர்கள் 10 பேரின் ஊழல் பட்டியலை வெளியிடுகிறது ஓபிஎஸ் அதிமுக?

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரசாரத்தில் தமிழக அமைச்சர்கள் 10 பேரின் ஊழல் பட்டியலை வெளியிட அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தேர்தல் களத்துக்கே வராமல் இருந்த ‘மேட்’ பேரவை தீபாவும் நேற்று படகு சின்னத்துடன் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அதிமுக (அம்மா) வேட்பாளர் தினகரன் 57,000 வீடுகள் கட்டித் தரப்போவதாக அடித்துவிட்டிருக்கிறார்.

அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) கட்சியும் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது. திமுக வேட்பாளர் மருது கணேஷ் உள்ளூர் பிரச்சனைகளை அதிகமாக முன்வைத்து வாக்கு சேகரித்து வருகிறார். பாஜகவின் கங்கை அமரன், மார்க்சிஸ் கட்சியின் லோகநாதன், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் ஆகியோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக( புரட்சித் தலைவி அம்மா) வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரசாரம் செய்து வருகிறார். இந்த பிரசாரத்தின் உச்சகட்டமாக தமிழக அமைச்சர்கள் 10 பேரின் ஊழல் பட்டியலை விரைவில் ஓ. பன்னீர்செல்வம் வெளியிடக் கூடும் என கூறப்படுகிறது.