ரஷியாவில் ஊழல் மலிந்து விட்டதால், பிரதமர் பதவியில் இருந்து டிமிட்ரி மெத்வதேவ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி சார்பில் ஞாயிற்றுக் கிழமை போராட்டம் நடைபெற்றது.
தலைநகர் மாஸ்கோவில் நடந்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி தலைமை தாங்கினார். போராட்டங்களில் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரிய அளவிலான போராட்டமாக இது இருந்தது. இதனையடுத்து அலெக்சிநவால்னி உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைதான அலெக்சிநவால்னி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தான் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி வருகிற 2018-ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் புதினை எதிர்த்து போட்டியிட உள்ள நிலையில் அவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நவால்னி புதினிக்கு எதிராக வெற்றி பெறுவதற்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.