பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் புகழாரம்

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்த நிலையில், அம்மாநிலத்தை சேர்ந்த மற்றொரு காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான எம்.வி.ராஜசேகரன், பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘சமீபத்திய சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதாவின் அபரிமிதமான வெற்றிக்காக எனது இதயபூர்வ வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இளைய தலைமுறை வாக்காளர்களுடன் தாங்கள் நேரடி பிணைப்பு ஏற்படுத்தி இருக்கிறீர்கள். சாதி, மத எல்லைகளை கடந்து ஏழைகள் மற்றும் பெண்களின் ஆதரவை பெற்று விட்டீர்கள். வறுமை ஒழிப்பிலும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் கவனம் செலுத்தி வரும் தங்களை பாராட்டுகிறேன்’ என்று கூறியுள்ளார்.