பெண் பிள்ளைகள் இயல்பாகவே தங்கள் அப்பாக்களின் மீது பாசம் கொண்டவர்களாகவும், ஆண் பிள்ளைகள் தங்கள் அம்மாக்களின் மீது பிரியம் கொண்டவர்களாகவும் இருப்பதை பலரும் கவனித்திருக்கலாம். அதன் பின்னணியில் மனிதனது பல்லாண்டுகால பாரம்பரியம் கொண்ட மன உணர்வுகள் அடிப்படையாக இருப்பது அறியப்பட்டுள்ளது.
மெண்மை கொண்டவர்கள் :
பெண் குழந்தைகளிம் மனம் இயல்பிலேயே மென்மையான தன்மை கொண்டதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே வரக்கூடிய சாதாரண சண்டை என்றால் கூட அதன் வாயிலாக, மன அளவில் பெண் குழந்தைகள்தான் முதலில் பாதிக்கப்படுகிறார்கள். குடும்பம், பள்ளி, சமூகம், நண்பர்கள் மற்றும் இப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஆகிய பல்வேறு நிலைகளில் உள்ள சிக்கல்களை இன்றைய பெண் குழந்தைகள் சந்திக்கிறார்கள்.
ஆய்வறிக்கை :
‘இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரிசர்ச்’ ஆய்வறிக்கையில் இந்தியாவில் 4 முதல் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 12 சதவிகிதம் பேர் உளவியல் சார்ந்த சிக்கல் உள்ளவர்களாக இருக்கிறார்கள் எனும் தகவலை தந்திருக்கிறது. பல்வேறு குழந்தைகள் நல நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் உளவியலாளர்கள் மேற்கண்ட சிக்கல் பற்றி பல்வேறு தகவல்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களால் தரப்பட்ட ஆலோசனைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
சிக்கல் இருவகை :
பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்கள் இரண்டு வகையாக உள்ளன. முதலாவது உடல்நிலை சார்ந்து ஏற்படக்கூடியது. இரண்டாவது அவர்களது வளரும் சூழல் மற்றும் உணவு முறைகள் சார்ந்து ஏற்படக்கூடியது. அவர்களது இயல்பான வளர்ச்சிக்கு தேவைப்படும் அவசியமான சத்துக்கள் கிடைக்கவில்லை என்றால் நரம்பு மண்டல பாதிப்பாக மாறி, காலப்போக்கில் அது உளவியல் சிக்கலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வல்லுனர்கள் கூறுவது கவனிக்கத்தக்கது.
பெற்றோர்கள் :
பொதுவாக, பெண் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகள் அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் அமைவது இல்லை. காலையில் முதல் இரவு வரையிலான அவர்களது அன்றாட நடவடிக்கைகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் தீர்மானிக்கப்படுகிறது. தேர்வுகள் மற்றும் மனப்பாட பகுதிகளுக்கு தரப்படும் நேர நெருக்கடிகளால், விளையாடுவதற்கு நேரம் இல்லாமல் போகிறது. விளையாட்டின் மூலம் கிடைக்கும் நண்பர்கள், அனுபவம் ஆகியவை கிடைக்காமல் போவதாலும் பெண் குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.
படிப்பதில் செலவழிக்கும் கூடுதல் நேரம் காரணமாக உண்டாகும் மனஅழுத்தம் அவர்களது பசி உணர்வை பாதிப்பதால், மதிய உணவை சாப்பிடாமல் கீழே கொட்டிவிடும் வாய்ப்புகள் உள்ளன. அதன் காரணமாக, சோர்வாக வீடு திரும்பும் குழந்தைகள் ‘ஜங்க் புட்’ வகைகளை உண்பதும் வழக்கமாக உள்ளது.
கருவறை பொறுப்பு :
அன்னையின் கருவில் இருந்தே குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் சமூகம் மற்றும் குடும்ப அளவில் தொடங்கப்படுவது நமது பாரம்பரியத்தில் வழிவழியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மகிழ்ச்சியை தரக்கூடிய அத்தகைய நிகழ்ச்சிகள் காரணமாக கருவுற்ற பெண்கள் சந்தோஷமான மனநிலையில் இருப்பார்கள். கருவுற்ற அன்னையின் மனப்பதற்றம், குழந்தையின் இயல்பான மூளை இயக்கத்தை பாதிப்பதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது.