டெல்லியில் தமிழக விவசாயிகள் உள்நோக்கத்துடன் போராடுகிறார்கள் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படுவது மாநில அரசின் பிரச்சினை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு, விவசாயிகள் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் அறிவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த விவசாயிகளின் அரை நிர்வாணமாக 15வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் மத்திய அமைச்சர்களை சந்திக்க தமிழக அரசு ஏற்பாடு செய்தது. டெல்லியில் இன்று போராடும் விவசாயிகள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசுகிறார்கள். விவசாயிகள் மாலை 4 மணிக்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கை சந்திக்கிறார்கள்.
இந்நிலையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் உள்நோக்கத்துடன் போராடுகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு மறைக்கிறது. விவசாயக் கடன் ரத்து என்பது மாநில அரசின் பிரச்னை என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
அய்யாக்கண்ணு அவர்கள் எத்தனை ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார்கள் என்று கேட்க வேண்டும். இது மத்திய அரசுக்கு எதிராக தூண்டிவிடப்பட்ட போராட்டம் என்றும் கூறியுள்ளார். நிவாரண நிதி கேட்டுள்ளது அந்தந்த துறைகளுக்கு தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.