காவடியாட்டம் என்பதன் விளக்கம்!

`இலங்கையிலும், தமிழ் நாட்டிலும், தமிழர் வாழும் பிற நாடுகளிலும் உள்ள முருகன் கோவில்களில் வழிபாட்டின் ஒரு கூறாகக் காவடியாட்டம் உள்ளது.
முருகன் கோவிலுக்குச் சென்று காவடி எடுப்பதாக பக்தர்கள் நேர்த்தி வைப்பது உண்டு. கோவில்களில் காவடி எடுப்பதில் இளவயதினரிலிருந்து பெரியவர் வரையிலான பலரும் பங்கேற்பர்.

கா அடி என்பது காவாகச் சுமக்கப்படும் (முருகப் பெருமானின்) திருவடி. கா என்பது இருபுறமும் தொங்கும் சுமை. ‘காவடியாட்டம்’ என்பது ‘காவடி’ ‘ஆட்டம்’ என்னும் இருசொற்களின் சேர்க்கையால் உருவானது.

‘காவடி’ என்னும் சொல் ‘காவுதடி’ என்பது மருவி உருவானதாகக் கருதப்படுகின்றது. காவடியின் உண்மையான தோற்றம் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.
இது தொடக்கத்தில் சுமை சுமப்பதற்கான நீளமான ஒரு தடியையே (கோல்) குறித்தது. இதன் தொடர்ச்சியாகவே ஒரு நீளமான தடியின் இரண்டு முனைகளிலும், பால், தேன் அல்லது இளநீர் நிரப்பிய குடங்களைத் தொங்கவிட்டுக் காவடி எடுக்கும் வழக்கம் நிலவுகிறது.

பூக்கள், வெட்டிவேர், பட்டுத்துணி, மயிலிறகு போன்றவற்றினால் காவடிகள் அழகூட்டப்படுகின்றன. தற்காலத்துக் காவடிகள் பல கூடிய அழகுணர்ச்சியுடன் உருவாக்கப்படுகின்றன. ஆனாலும் இதன் அடிப்படையான பகுதி ஒரு தடியே இத்தடியின் இருமுனைகளையும் இணைக்கும் வகையில் மரத்தாலும், மெல்லிய பிரம்புகளினாலும் ஆன ஒரு வளைவான அமைப்பு இருக்கும்.

இதன் மேல் அழகான குஞ்சங்களுடன் கூடிய பட்டுத்துணி போர்த்தப் பட்டிருக்கும். நான்கு மூலைகளிலும் ஏராளமான மயில் இறகுகளைச் சேர்த்துக் கட்டி அழகூட்டியிருப்பர். வளைவுப் பகுதியின் உச்சியிலும் உயரமான கூம்பு வடிவான அலங்காரக் கூறு அமைந்திருக்கும். எனினும் காவடிகள் வேறுபட்ட அலங்காரங்களுடனும் அமைந்திருப்பது உண்டு.

பொதுவான காவடி ஏறத்தாழ 3 அடிகள் அகலம் உள்ளதாக இருக்கும். தோளில் வைக்கும்போது இரண்டு பக்கங்களிலும் சற்றுக் கூடுதலாக இருக்கும்படி இது அமையும். இது 5 கிலோ தொடக்கம் 7 கிலோ வரை நிறை கொண்டதாக இருக்கும். ஆனால் சிறுவர்களும் காவடி எடுப்பது உண்டு ஆகையால் அவர்களுக்காக நிறை குறைவான சிறிய காவடிகளும் உருவாக்கப்படுகின்றன.