ஸ்பெயின்: தம்பதியரையும் மகப்பேற்றையும் ஊக்குவிக்க ’செக்ஸ் மந்திரியாக’ பெண் நியமனம்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் சுமார் ஐந்து லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட செல்வ செழிப்பு மிக்க ஒரு நாடாக விளங்கி வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு இங்கு எடுக்கப்பட்ட தேசிய அளவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் 4 கோடியே 64 லட்சத்து 23 ஆயிரத்து 64 பேர் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

முந்தைய ஆண்டுகளில் எப்போதும் இல்லாதவாறு கிடுகிடுவென சரிந்துள்ள நாட்டின் மக்கள் தொகை குறித்து கவலையடைந்த ஸ்பெயின் அரசு, இதற்கான அடிப்படை காரணம் என்ன? என்று ஆய்வு நடத்தியதில் மக்களின் இறப்பு விகிதத்துக்கு ஈடு செய்யும் வகையில் மகப்பேறு நடைபெறாததே இந்த சரிவுக்கு காரணம் என்பது உறுதிபட தெளிவானது.

குறிப்பாக, அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் 18 முதல் 49 வயதுக்குட்பட்ட தம்பதியரிடையிலான குழந்தை பிறப்பு விகிதாச்சாரம் 1.58 ஆக இருக்கும் நிலையில் ஸ்பெயினில் மட்டும் இது வெறும் 1.3 சதவீதமாகவே உள்ளதை அறிந்து அரசு திடுக்கிட்டது.

இதேநிலை நீடித்தால், எத்தனை வளங்கள் இருந்தாலும் எதிர்காலத்தில் மக்கள் தொகையில் மிகவும் பலவீனமான நாடாக ஸ்பெயின் மாறிவிடக் கூடும் என்ற எச்சரிக்கை மணியோசை ஆட்சியாளர்களை நிலைகுலைய வைத்தது.

இதுதொடர்பாக, மேற்கொண்டு நடத்தப்பட்ட பல்வேறுகட்ட ஆய்வுகளில் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து மகப்பேறு விகிதம் 18 சதவீதம் குறைந்து, அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் புள்ளிவிவரம் அரசை மேலும் கதிகலங்க வைத்தது.

மேலும், கடந்த 1977-ம் ஆண்டுவாக்கில் இங்கு குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியரின் எண்ணிக்கை 15 லட்சமாக இருந்தது. ஆனால், இதே எண்ணிக்கை 2015-ம் ஆண்டில் 44 லட்சமாக உயர்ந்துவிட்ட பகீர் உண்மை இந்த நிலையை மாற்ற உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நெருக்கடியையும், கட்டாயத்தையும் அரசுக்கு ஏற்படுத்தியது.

அதேவேளையில், அங்கு ஆண்-பெண் இருவருமே பணிக்கு செல்வதாலும், மகப்பேற்றுக்கு பின்னர் மனைவியின் வழக்கமான பணிகளில் உதவி, ஒத்தாசை செய்ய ஆண்கள் முன்வராததாலும் குழந்தை பெற்றுகொள்ளும் ஆசை பெண்களிடையே நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருவதும் கண்கூடாக தெரிய வந்தது.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கையில் 2016-ம் ஆண்டு நாட்டில் நிகழ்ந்த இறப்புகளுக்கும் குழந்தை பிறப்புக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத அளவுக்கு நீண்டதூர இடைவெளி உள்ளதை கண்ட ஸ்பெயின் அரசு, ‘நன்றே செய்க! அதையும், இன்றே செய்க!’ என்ற நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டது.

இதன் விளைவாக, தம்பதியரிடையே பாலியல் இச்சையை அதிகரிக்கச் செய்யவும் மழலைச் செல்வம் என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் மிகவும் இன்றியமையாத செல்வம் என்று உணர்த்தும் வகையில் புதிய திட்டங்களை தீட்டி, நாட்டு மக்களிடையே குழந்தை பேற்றை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஊக்குவிப்பதற்காக இதற்கென தனியாக ஒரு மந்திரியை நியமிக்க பிரதமர் மரியானோ ரஜாய் தீர்மானித்தார்.

குழந்தைகளை பெற்றுகொள்வதற்கு பெண்களை தயார்படுத்த ஒரு ஆணை மந்திரியாக நியமித்தால் பொருத்தமாக அமையாது என்று முடிவெடுத்த பிரதமர், ‘செக்ஸ் மந்திரி’ என்று ஒரு புதிய பதவியை ஏற்படுத்தி, எடெல்மிரா பரெய்ரா என்ற பெண்ணை ஸ்பெயின் நாட்டின் செக்ஸ் மந்திரியாக கடந்த மாதம் நியமித்துள்ளார்.

இந்தியாவின் பல மாநிலங்களில் கல்வித்துறைக்கு என்று இரு மந்திரிகள் நியமிக்கப்பட்டு, பள்ளிக்கல்வி துறை மற்றும் உயர்கல்வித்துறை என தனித்தனியாக நிர்வாகம் செய்வதுபோல், ஸ்பெயின் நாட்டின் வரலாற்றில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள ‘கலவித்துறை’ மந்திரியாக பொறுப்பேற்றுள்ள எடெல்மிரா பரெய்ரா, என்ன சாகசத்தை செய்து நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தில் பெரிய சாதனையை நிகழ்த்தப் போகிறார்?, என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.