தொடரும் விமலின் உண்ணாவிரதம் : மருத்துவ சிபாரிசுக்காக காத்திருக்கும் சிறைச்சாலை நிர்வாகம்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்றஉறுப்பினருமான விமல் வீரவங்சவின் உண்ணாவிரதம் இன்றுடன் எட்டு நாட்களைத் தாண்டியுள்ளது.

பொதுச்சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவங்ச, தனக்கு பிணை வழங்குமாறு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆரம்பத்தில் நான்கு நாட்கள் வரை நீர், ஆகாரம் எதுவும் இன்றி உண்ணாவிரதம் மேற்கொண்ட காரணத்தினால் ஏற்பட்ட ஆரோக்கியக் குறைவு காரணமாக அவர் தற்போது சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக அவர் திரவ ஆகாரங்களை உட்கொண்டு வருகின்ற போதிலும், திட உணவுகளைத் தவிர்ப்பது அவரது ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் என்று சிறைச்சாலை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் விமல்வீரவங்சவை தொடர்ந்தும் சிறைச்சாலை மருத்துவமனையில் வைத்திருப்பதா? அல்லது கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றுவதா என்பது தொடர்பில் சிறைச்சாலை மருத்துவர்களின் சிபாரிசுக்காக சிறைச்சாலைகள் திணைக்கள நிர்வாகம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.