மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக கொண்டு வந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.
சித்தாண்டி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் இப்போது ஒரு நல்லதொரு சூழ்நிலையில் இருக்கின்றோம் என்பதை எமது மக்கள் அறிவார்கள். முன்பெல்லாம் வெள்ளை வான் பிரச்சினை, ஆட்கடத்தல்கள், பொலிஸ், இராணுவத்தின் கெடுபிடி இவ்வாறான நிலமைகள் இருந்தது.
இப்போது அந்த நிலைமைகள் எல்லாம் இல்லாமல் போய்விட்டது. இந்த நிலைமை எவ்வாறு வந்தது என்று சொல்லுகின்ற போது எமது சகோதரர்கள் சிலர் சொல்லுகின்றார்கள் நாங்கள் வாக்குப் போட்டோம் வாக்குப் போட்டதனால் மைத்திரிபால சிறிசேன வந்துவிட்டார் என்று அவ்வாறு அல்ல. மைத்திரிபால சிறிசேன எவ்வாறு களத்திற்கு வந்தர் என்பதைப் பார்க்க வேண்டும்.
இந்த நாட்டில் மிகப் பெரியதொரு திட்டத்துடன் முன்பிருந்த ஜனாதிபதி, இந்த நாட்டை தானும் தன்னுடைய குடும்பத்தினரும் தொடர்ச்சியாக ஆளக்கூடிய விதத்திலே மிக இறுக்கமான, நுணுக்கமான பல்வேறு திட்டங்களை வைத்திருந்தார்.
ஆனால் அந்தத் திட்டங்களையெல்லாம் முறியடிக்கக் கூடிய விதத்திலே ஒரு பொதுவான வேட்பாளர் ஒருவரைக் கொண்டு வர வேண்டும் என்கின்ற விடயத்தில் எமது தலைவர் சம்பந்தன், தென்தரப்புத் தலவர்களும் மிக மிக நுணுக்கமாக வேலை செய்தார்கள்.
யாரோ ஒருவரை வேட்பாளராகக் கொண்டு வர வேண்டும் என்று அல்ல. வெல்லக் கூடிய ஒருவரை வேட்பாளராகக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக.
ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராகக் கொண்டு வர வேண்டும் என்று சிலர் முன்மொழிந்த போது எமது தலைவர் மிக மிக உறுதியாகச் சொன்னார் அவரை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று. மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
இந்த விடயத்தில் அப்போது எமது தலைவர் சிலவேளைகளில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவோம் என்று ஒரு சொல் சொல்லியிருந்தால் ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராக போடப்பட்டிருக்கலாம். ஆனால் அப்படி போடப்பட்டிருந்தால் எந்த சக்திகள் தலைகீழாக நின்றாலும் இந்த ஆட்சியை
மாற்றியிருக்க முடியாது. அனைவரும் மிகவும் நிதானமாக யோசிக்க வேண்டிய விடயம் இது.
மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராகக் கொண்டு வருவதற்கு மிகமிக நுணுக்கமாக ஆராய்ந்தவர் எமது தலைவர் என்பதை நாங்கள் உறுதியாகச் சொல்லுவோம்.
எமது தலைவரின் அப்போதைய தீர்மானத்தின் பிரகாரம் எத்தகைய மாற்றம் வந்திருக்கின்றது என்பதைப் பாருங்கள்.
எனவே மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக கொண்டு வந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஜெனீவாவிலே இடம்பெற்ற விடயங்கள் பற்றி பார்த்தால் முதலில் சொன்னார்கள் அரசாங்கங்களுக்கு எதிராக எந்தவொரு தீர்மானத்தையும் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வர மாட்டார்கள் என்று ஆனால் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பான இலங்கைக்கு எதிரான தீர்மானங்களைக் கொடுவருவதில் முழுச் சூத்திரதாரியாக இருந்தவர் எமது தலைவர் சம்பந்தன் ஐயா தான்.
அவரின் இராஜதந்திரத்தின் வெற்றிதான் அங்கு திர்மானங்களாக வந்தன. ஆனால் அந்தத் தீர்மானங்கள் எல்லாம் வந்ததன் பிறகு எங்களோடு இருந்த சிலர் அங்கு சென்று சில சில அறைகளில் இருந்து விட்டு பத்திரிகையாளர் மாநாடுகளை மேற்கொண்டு விட்டு ஏதோ மண்ணைக் கயிறாகத் திரிப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
அடிப்படையெல்லாம் மறந்து விட்டு இந்த விடயம் பற்றி இந்த இடத்திற்கு கொண்டு வந்தவர் யார் என்பதைப் பற்றி சற்றுமே சிந்திக்காதவர்களாக இன்று சுமந்திரனையும், சம்பந்தன் ஐயாவையும் வெளியே தூக்கிப் போட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் மக்கள் மிக நிதானமாக நம்முடைய தலைவர் யார் என்பதை கவனமாக ஆராய்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்போது இருக்கின்ற நிலைமையை உருவாக்கியது முழுக்க முழுக்க எமது தலைவர் அவர்களே.
இந்த நிலைமையை வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு வெற்றியையும், மீட்சியைப் பெற்றுத் தர விருப்பம் கொண்டுள்ளவரும் எமது தலைவர்தான்.
எனவே அவருக்கு கைகொடுக்கக் கூடிய விதத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லா அங்கத்தவர்களும் உழைத்திட வேண்டும்.
இதை மிக நுணுக்கமாக நீங்கள் சிந்தியுங்கள் என்று எமது சகோதரர்களுக்கு நான் மீண்டும் மீண்டும் சொல்லுகின்றேன்.
வெறுமனே மிதப்போடு இருக்க வேண்டாம். ஒரு குடும்பத்தினுடைய தலைவனுக்குத் தான் அதனை வழிநடத்துவதற்குரிய கஷ்டங்கள் தெரியும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்லலாம் ஆனால் ஒரு தலைவனுக்குத் தான் தெரியும் எவ்வளவு கஷ்டங்களுக்குள் இதனை எடுத்தோம்,
எவ்வளவு கஷ்டங்களுக்கூடாக இவற்றைக் கொண்டு செல்ல வேண்டும் என்று.
சிலர் இப்போது இருக்கின்ற இந்த சூழ்நிலையை ஒரு குதூகலமான நிகழ்சியாக எடுத்துக் கொண்டு தாங்கள் நினைத்தபடியெல்லாம் சிந்திக்கத் தொடங்குகின்றார்கள். இவ்வாறு சிந்தித்து நீங்கள் தமிழினத்திற்கு எதையுமே பெற்றுத் தரமாட்டீர்கள்.
எங்கள் தமிழ்த் தலைமை எவ்வாறு சிந்திக்கின்றதோ அந்தச் சிந்தனையின் ஊடாகச் செல்ல வேண்டும். ஊசியின் பின்னே செல்லுகின்ற நூலாக தொடர்ந்து செல்வது தான் உண்மையான தொண்டரின் கடமை. அவர்களாலே தான் சமுதாயத்திற்கு நண்மை உண்டாகும்.
பழமையை அங்கீகரித்துக்கொண்டு பழமையின் வழியிலே செல்லுகின்ற தொண்டர்களால் மட்டும் தான் அந்தத் தலைவன் காட்டுகின்ற இலக்கினை அடைய முடியும். எமது தலைமைக்கு நாங்கள் கரம் கொடுத்திட வேண்டும்.
அந்த வகையில் இவ்விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய எல்லா உறுப்பினர்களும் இருந்து நிதானமாகச் சிந்தியுங்கள் என்றார்.