நல்லாட்சி அரசாங்கத்தின் அடாவடி அமைச்சர்களுக்கு ராஜபக்ஷ அரசில் மன்னிப்பு இல்லை: பிரசன்ன

நல்லாட்சி அரசாங்கத்தில் அடாவடி மற்றும் ஊழல்களில் ஈடுபடும் அமைச்சர்களுக்கு ராஜபக்ஷ அரசாங்கத்தில் எந்தவித மன்னிப்பும் வழங்கப்பட மாட்டாது என கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க எச்சரித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிங்கள சமூக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றில் பங்குகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள விமல் வீரவங்ச சிறையில் இருந்து விடுதலை செய்யப்படும் வரை நாங்கள் உயிரைப் பணயம் வைத்து போராடத் தயாராக இருக்கின்றோம்.

விமலின் விடுதலை தாமதப்படுத்தப்படும் ஒவ்வொரு நாட்களும் அரசாங்கத்தின் ஆயுள் குறைந்து கொண்டு போவதாகவே அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் அடாவடி மற்றும் ஊழல்களில் ஈடுபடும் அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்குத் துணை செய்யும் அதிகாரிகள் ஆகியோர் எதிர்காலத்தில் உருவாக்கப்படவுள்ள ராஜபக்ஷ அரசாங்கமொன்றில் மன்னிக்கப்படவே மாட்டார்கள்.

மேலும் அவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்பதில் தயக்கம் காட்டவே மாட்டோம் என கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.