ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர் தான் டிடிவி தினகரன்.. ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர் தான் டிடிவி தினகரன் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 12-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனன், அதிமுக அம்மா அணி சார்பில் டி.டி.வி.தினகரன், பாஜக சார்பில் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், சிபிஎம் சார்பில் லோகநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் ஆர்.கே.நகரில் களம் காண்கிறார்.

தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்களுடைய தீவிர பிரசாரத்தை தொடங்கி விட்டன. இந்நிலையில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக ஆர்.கே.நகரில் பிரசார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் பேசியதாவது: திமுக தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணி மக்கள் அணி. ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து அந்நிய செலவாணி வழக்கு குற்றவாளி தான் டிடிவி தினகரன். ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர் தான் டிடிவி தினகரன்.

ஜெயலலிதாவை திமுக எதிர்த்தே தவிர துரோகம் செய்யவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரலாற்றையே மாற்றி அமைக்கும். அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணியும், தினகரன் அணிகளிடமும் ஆர்.கே.நகர் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஜெயலலிதா உடல்நலம் குறித்து இப்போது பேசும் ஓபிஎஸ், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தபோது ஏன் பேசவில்லை. சிகிச்சைக்காக ஜெயலலிதா வெளிநாடு செல்லக்கூட தடைவிதித்தவர்கள்தான் இரண்டு அணிகளாக பிரிந்துள்ளனர். ஜெயலலிதா மரணம் பற்றி சிபிஐ விசாரணை கோரி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்காதது ஏன்? ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெருவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.