ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி என்றால் சசிகலா பற்றி முழு ரகசியத்தையும் வெளியிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி திமுக செயல் தலைவர் ஸ்டாலின். அக்கட்சியின் வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து இன்று தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது முக ஸ்டாலின் பேசியதாவது, திமுக வேட்பாளரின் எளிமையைக் கண்டு பொதுமக்கள் வரவேற்கின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றையே மாற்றி அமைக்கும். அதிமுகவின் பெரா மாஃபியா அணியும், மணல் மாஃபியா அணியும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஜெயலலிதா மரணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? ஜெயலலிதா மரணம் அடைந்தபோது பதவியின் மீதே ஓபிஎஸ் குறியாக இருந்தார். தமிழகம் நிதிப்பற்றாக்குறையால் தவிப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் நிதி அமைச்சராக இருந்தது தான் காரணம். சேகர் ரெட்டி ரெட்டி குறித்து ஆதாரங்களை திரட்டினால் முதல் குற்றவாளியாக ஓபிஎஸ் தான் இருப்பார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பதே சந்தேகமாத்தான் இருந்தது. ஏனேனில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பணமோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஜெயலலிதாவால் ஓ.பன்னீர்செல்வமும் ஓரம் கட்டப்பட்டார். ஊழல் செய்ததால் தான் பொதுப்பணித்துறையை அவருக்கு ஜெயலலிதா ஒதுக்கவில்லை. கருணாநிதியின் மகன் என்பதால் எதையும் ஆதாரத்துடன் தான் பேசுவேன்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்த ஓ.பன்னீர்செல்வம், அதன்பின்பு சசிகலா பற்றி 10 சதவீத உண்மைகளை மட்டுமே கூறியுள்ளேன் என்றார். அப்படியானால் சசிகலா குறித்த 90 சதவீதம் ரகசியங்களை ஓபிஎஸ் வெளியிடாததன் காரணம் என்ன? ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி என்றால் முழு ரகசியத்தையும் ஓபிஎஸ் வெளியிட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.