கிம் ஜாங் நாம் உடல் மலேசியாவில்தான் இருக்கிறது: மந்திரி அறிவிப்பு

வடகொரியாவின் ஆட்சியாளரான கிம் ஜாங் அன் அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 46), கடந்த மாதம் 13-ந் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில், வட கொரியாவுக்கு தொடர்பு இருப்பதாக மலேசியா சந்தேகிக்கிறது. ஆனாலும் கிம் ஜாங் நாம் படுகொலையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வடகொரியா தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக அளவில் பனிப்போர் மூண்டதை தொடர்ந்து மலேசிய நாட்டினர், வட கொரியாவில் இருந்து வெளியேறுவதற்கும், மலேசியாவில் உள்ள வடகொரிய பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் தடைவிதிக்கப்பட்டது.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட கிம் ஜாங் நாம் உடலை அவரது உறவினர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளும்படி மலேசியா அழைப்பு விடுத்தது. ஆனால் அவரது உடலை பெறுவதற்கு யாரும் முன்வரவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவை எட்டியதாகவும், அதன்படி கிம் ஜாங் நாம் உடலை விமானம் மூலம் சீனாவிற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், வடகொரியாவில் பியாங்காங் நகருக்கு கொண்டு சொல்லப்போவதாகவும் மலேசிய ஊடகங்களில் முரண்பட்ட தகவல்கள் வெளியாகின.

இது குறித்து விளக்கம் அளித்த மலேசியாவின் சுகாதாரத்துறை மந்திரி சுப்பிரமணியம் சதாசிவம், “கிம் ஜாங் உடல் கோலாலம்பூரில் உள்ள பிணவறையில்தான் இருக்கிறது. இதுவரை அவரது உடலை பெற யாரும் முன்வரவில்லை” என கூறினார்.

அதே சமயம் இதே நிலை நீடிப்பது கவலை அளிப்பதாக கூறிய அவர் இந்த விவகாரம் தொடர்பாக வடகொரியாவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.