ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா இன்று வென்றது. இதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், சூழ்நிலைகளை எப்படிக் கையாளுவது என இந்திய அணி தனக்கு கற்றுக்கொடுத்தாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
இந்தத் தொடரில் இந்திய அணி நன்றாக விளையாடியது. நான் அவர்களிடமிருந்து சில விஷயங்களை நன்றாக கற்றுக்கொண்டேன். சில சந்தர்ப்பங்களில் நான் உணர்ச்சிவசப்பட்டு எனது கட்டுப்பாட்டை இழந்து விட்டேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தத் தொடரில் எனது திறமையை நினைத்து நான் சிறிதளவு பெருமைப்படுகிறேன். கேப்டன் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் சில விஷயங்களை நான் கற்று வருகிறேன். (இந்தத் தொடரில் ஸ்மித் 499 ரன்களைக் குவித்துள்ளார்)
தொடரை இழந்தது ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் சிறந்த முறையில் விளையாடி, ஒவ்வொரு டெஸ்ட்டிலும் எங்களது போராட்டத்தை வெளிப்படுத்தினோம். இதற்காக, எனது அணி வீரர்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்.
கடைசி தொடரில் 400-450 ரன்களைக் குவித்திருந்தால் இந்த ஆட்டம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அதற்கு நேர்மாறாக 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளித்தது.
இந்தத் தொடரை நாங்கள் 0-4 என்ற கணக்கில் இழந்து விடுவோம் என நினைத்தோம். ஆனால் அதுபோல எதுவும் நிகழவில்லை. ஒரு அற்புதமான தொடரை சிறந்த முறையில் நாங்கள் விளையாடியிருக்கிறோம். இந்த பெருமை அனைத்தும் இந்திய அணியையே சேரும்” என்றார்.