ஐக்கிய தேசியக் கட்சியில் அடிப்படை ரீதியான மாற்றங்கள் செய்யப்பட உள்ளதுடன், கட்சியின் பொதுச் செயலாளர் பதவி உள்ளிட்ட மிக முக்கியமான பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் கட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள மிகப் பாரியளவிலான மாற்றங்கள் இதுவெனக் குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவிகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்த்தப்படவுள்ளதுடன் அதில் ஒரு சிறுபான்மை இனத்தவர் நியமிக்கப்படவுள்ளார்.
மேலும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கும், 1989ம் ஆண்டில் முதல் முறையாக நாடாளுமன்றம் தெரிவான தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவருக்கும் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது.
கட்சியின் துணைத் தலைவர் பதவியை தற்போது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வகித்து வருகின்றார். கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல் குறித்த திகதிகள் நிர்ணயம் செய்யப்பட்டதன் பதவி மாற்றம் குறித்து அறிவிக்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி தலைமைப் பதவிகளில் மாற்றம் இல்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கு எதிர்வரும் 5ம் திகதி சில புதுமுகங்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களை வழிநடத்தும் பொறுப்பு கட்சியின் புதிய பிரதித் தலைவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
கட்சியின் முக்கிய பொறுப்புக்கள் எதிர்கால தலைமுறையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அநேகமான பதவிகள் பற்றி எதிர்வரும் 5ம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.