ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவராக இருக்கும் ரவி கருணாநாயக்க அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அப்பதவிக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் முக்கிய பொறுப்புகளை இரண்டாம்நிலை தலைமைத்துவத்திடம் கையளிக்கும் நோக்கில் விரைவில் கட்சியில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் தலைமையில் கூடவுள்ள மத்திய செயற்குழுவில் இத் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் தற்போது ஒன்றாக இருக்கும் பிரதித் தலைவர்கள் பதவி மூன்றாக அதிகரிக்கப்படவுள்ளதோடு, சிறுபான்மையினத்தவர் ஒருவரும் பிரதித் தலைவராக நியமனம் பெறும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, ரவி கருணாநாயக்கவுக்கு பிரதித் தலைவர் பதவி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கும் உபதலைவர் பதவி கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 6 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியில் முக்கிய மாற்றங்கள் நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.