சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் அறிக்கையை இன்று (வியாழக்கிழமை) பன்னீர்செல்வம் அணியினர் வெளியிட்டுள்ளனர்.
இன்று காலை தண்டையார்பேட்டையில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்த தமிழக முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் பத்து பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை தொகுதி வேட்பாளர் மதுசூதனனிடம் கையளித்தார்.
அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறித்த தேர்தல் அறிக்கையில், 16 தலைப்புக்களில் தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றுள் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு, சுகாதாரம், மருத்துவ வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படும், சுகாதாரம் குடிநீர் போக்குவரத்து வசதிகளை அமைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும், கொடுங்கையூர் குப்பைமேடு அகற்றப்படும், குடியிருப்பு மற்றும் வீட்டுமனை உரிமங்கள் வழங்க ஏற்பாடு உள்ளிட்ட மேலும் பல வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் தரமான கல்வி அமைக்க முன்னுரிமை வழங்கப்படும் என்ற உத்தரவாதமும் ஆர்.கே நகரில் ஒரு மேல்நிலைப்பள்ளி மற்றும் இரண்டு இடைநிலை பள்ளி அமைக்கப்படும் என்றும் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.