ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றம்: புதிய மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளதாக மோடி பெருமிதம்

ஜி.எஸ்.டி. மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நாடு புதிய மாற்றத்துக்கு வழிவகுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமுல்படுத்தும் நோக்கிலான ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கும் மற்றும் சேவை வரி மசோதா, திருத்தங்களுடன் மக்களவையில் நேற்று (புதன்கிழமை) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, ‘ஜி.எஸ்.டி மசோதாவை நிறைவேற்றியமைக்கு வாழ்த்துகள். புத்தாண்டு, புதுச் சட்டம் மற்றும் புது இந்தியா’ என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோன்று மக்களவையில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ‘ஜி.எஸ்.டி தொடர்பான நான்கு மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.இது தொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகளும், மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் நிறைவுசெய்யப்படும்’ என்று கூறியுள்ளார்.